டெல்லி :இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், தற்போது அதிரடியாக விளையாடி வரும் இளம் வீரர் அபிஷேக் சர்மாவின் வளர்ச்சியை பெருமிதத்துடன் நினைவுகூர்ந்துள்ளார். நான்கு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்களுக்கு முன்பு அபிஷேக் சர்மாவிடம் தான் தெளிவாக பேசியதாக யுவராஜ் கூறினார். “நான் உங்களை ஐபிஎல் விளையாட ஊக்குவிக்க இங்கு வரவில்லை.
நீங்கள் நாட்டிற்காக விளையாட உதவவே நான் இங்கு இருக்கிறேன்” என்று அவரிடம் சொன்னதை யுவராஜ் மீண்டும் நினைவுபடுத்தினார்.யுவராஜ் தொடர்ந்து கூறுகையில், “அவர் நான் கேட்டதை சரியாகச் செய்தார். இப்போது 4 ஆண்டுகள் 3 மாதங்களுக்குப் பிறகு அவர் இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்” என்றார். அபிஷேக் சர்மா ஐபிஎல் தொடரில் தனது திறமையை நிரூபித்த பிறகு, தற்போது டி20 இன்டர்நேஷனல் போட்டிகளிலும் எதிரணிகளை திணறடிக்கும் வகையில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அவரது பேட்டிங் ஸ்டைல், ஸ்ட்ரைக் ரேட் மற்றும் மேட்ச் வின்னிங் திறன் ஆகியவை இந்திய அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளன.அபிஷேக் சர்மாவின் தற்போதைய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. டி20 போட்டிகளில் அவர் முதல் பந்திலிருந்தே தாக்குதலுக்கு தயாராக இருப்பது, பெரிய ஷாட்களை எளிதாக விளையாடுவது, அழுத்தமான சூழல்களில் கூட தனது ஆட்டத்தை தக்க வைத்துக்கொள்வது ஆகியவை அவரை தனித்துவமான வீரராக மாற்றியுள்ளன.
யுவராஜ் சிங் இத்தகைய இளம் வீரர்களை சரியான பாதையில் வழிநடத்தியதில் தான் ஆற்றிய பங்கை பெருமிதத்துடன் நினைவுகூர்ந்தார்.யுவராஜ் சிங்கின் இந்த கருத்து அபிஷேக் சர்மாவின் வளர்ச்சியை மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்கான நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.
ஐபிஎல் மூலம் தொடங்கிய பயணம் இப்போது தேசிய அணியில் தொடர்ந்து சாதனைகளை படைத்து வரும் அபிஷேக், யுவராஜ் போன்ற முன்னோடி வீரர்களின் வழிகாட்டுதலால் இன்று உலக அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். இத்தகைய வழிகாட்டுதல்கள் இந்திய கிரிக்கெட்டின் புதிய தலைமுறைக்கு பெரும் உத்வேகமாக அமைந்துள்ளன.
