டெல்லி : கேப்பிடல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷியை ஆட்டமிழக்கச் செய்த பிறகு ஆக்ரோஷமாக கொண்டாடியதற்காக ஒரு டிமெரிட் பாயிண்ட் வழங்கப்பட்டுள்ளார்.
மே 1 அன்று சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026-ன் 43வது லீக் போட்டியில் இந்த சம்பவம் நடைபெற்றது. இரண்டாவது ஓவரில் ஜேமீசன் வீசிய டிப்பிங் ஃபுல் டாஸ் பந்தை சூர்யவன்ஷி தவறாக மதிப்பிட்டு, பேட்டின் அடிப்பகுதியில் பட்டு பேட் வழியாக ஸ்டம்பில் பட்டு ஆட்டமிழந்தார்.
விக்கெட்டை வீழ்த்திய உடனேயே ஜேமீசன் பேட்ஸ்மேனுக்கு அருகில் சென்று ஆக்ரோஷமாக கொண்டாடினார். இந்தச் செயல் IPL-ன் கோட் ஆஃப் கண்டக்ட் Article 2.5-ஐ மீறியதாகக் கருதப்பட்டது. “மற்றொரு வீரரிடமிருந்து ஆக்ரோஷமான எதிர்வினையைத் தூண்டக்கூடிய மொழி, செயல் அல்லது சைகைகளைப் பயன்படுத்தியது” என்று BCCI தெரிவித்துள்ளது.
ஜேமிசன் பின்னர் பேட்டியில், “என் வாழ்க்கையில் ஒரு 15 வயது சிறுவனைப் பார்த்து நான் இவ்வளவு பயந்ததில்லை. ஆனால் திட்டமிட்டபடி வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி” என்று கூறினார்.
மேலும், இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்து 225 ரன்கள் குவித்த நிலையில், டெல்லி 5 பந்துகள் மீதமிருக்க இலக்கை எட்டிப் பிடித்தது. கே.எல். ராகுல் 75 ரன்களும், பதும் நிஸ்ஸாங்கா 62 ரன்களும் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.இந்த சம்பவம் இளம் வீரர்களுக்கு எதிராக அனுபவம் வாய்ந்த வீரர்கள் காட்டும் ஆக்ரோஷத்தை விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
