குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில் மிக நெருக்கமான கடைசி பந்து வரை சென்ற த்ரில் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அருண் ஜைட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டி ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை அளித்தது.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. ஜோஸ் பட்லர் 52 ரன்கள், கேப்டன் ஷுப்மன் கில் 70 ரன்கள் மற்றும் வாஷிங்டன் சுந்தர் 55 ரன்கள் என மூவரும் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். டெல்லி அணியின் சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பதிலுக்கு ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி அபாரமான முயற்சியை மேற்கொண்டது. கேஎல் ராகுல் 92 ரன்கள் எடுத்து அணியை வெற்றியின் எல்லைவரை அழைத்துச் சென்றார். நிஸ்ஸங்கா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரும் முக்கிய பங்களிப்பை அளித்தனர். ஆனால் இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டேவிட் மில்லர் கடைசி பந்தில் பந்தை தவறவிட்டார். இதனால் டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களுடன் தோல்வியைத் தழுவியது.
குஜராத் அணியின் பந்துவீச்சில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினர்.போட்டி முடிந்த பிறகு பேசிய குஜராத் கேப்டன் ஷுப்மன் கில்,“நாங்கள் யார்கர் வீசுவதா அல்லது மெதுவாக பந்து வீசுவதா என்பதைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தோம். மெதுவாக பந்து வீசினால் அதை பவுண்டரிக்கு அடிப்பது கடினம் என முடிவு செய்தோம்.
போட்டியில் இறுதிவரை வெல்வதற்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக கருதினோம், வெற்றியும் பெற்றோம்” என்றார்.இந்த ஒரு ரன் வித்தியாச வெற்றி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிக முக்கியமான இரண்டு புள்ளிகளைப் பெற்றுத் தந்துள்ளது. மறுபுறம், டெல்லி கேபிடல்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது.
