AsianGames2023: 50மீட்டர் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சிஃப்ட் சாம்ரா கவுர் அசத்தல்.!
சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன.
இதில் இந்திய அணியில் உள்ள 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். அதன்படி, அக்.8ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அந்தவகையில், இன்று நடைபெற்ற 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவைச் சேர்ந்த சிஃப்ட் சாம்ரா கவுர் தங்கம் வென்றுள்ளார்.
இதற்கு முன்னதாக, நடைபெற்ற ஆடவர் பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் விளையாட்டு, மகளிர் டி20 கிரிக்கெட் மற்றும் குதிரையேற்ற போட்டி ஆகிய மூன்று போட்டிகளில் இந்தியா தங்கம் வென்றது. அதோடு இன்று காலை நடைபெற்ற 25 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவை சேர்ந்த மனு பார்கர், ஈஷா சிங், ரிதிம் சங்வான் ஆகியோர் அடங்கிய அணி தங்கம் வென்று நான்காவது தங்கப்பதக்கத்தைப் பெற்றது.
இந்நிலையில், 50மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை சிஃப்ட் சாம்ரா கவுர் முதலிடம் பிடித்து தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம் இன்று ஒரே நாளில் இந்தியா இரண்டு தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. இதே 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவை சேர்ந்த ஆஷி சௌக்சே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா மொத்தமாக 5 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. மேலும், ஆசிய விளையாட்டு போட்டிகளில் 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா 18 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.