என் மீது வன்முறையை கட்டவிழ்த்தாலும், சிறையில் அடைத்தாலும் அஞ்ச மாட்டேன் என ராகுல் காந்தி பேட்டி
2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து இருந்தது.
2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ராகுல் காந்தி பேட்டி
டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைத்து ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வருகிறார். அப்போது பேசிய அவர், நாட்டில் ஜனநாயகம் தாக்கப்படுவதாக நான் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளேன். இதற்கான உதாரணங்களை தினம் தினம் பார்த்து வருகிறோம்.
போராடி முறியடிப்பேன்
பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவு குறித்து நான் நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்டேன். நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசிய பேசியதன் எதிரொலியை உணர்கிறேன். தேசத்திற்கு எதிரான சக்திகளை போராடி முறியடிப்பேன்.
இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது; நாட்டிற்கு எதிராக எதுவும் பேசவில்லை. மத்திய அரசால் எனது குரலை ஒடுக்க முடியாது. இந்திய அரசுக்கு எதிராக நான் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவை கேட்டதாக கூறுவது முற்றிலும் தவறு.
மக்களிடம் நியாயம் கேட்பேன்
என் மீது வன்முறையை கட்டவிழ்த்தாலும், சிறையில் அடைத்தாலும் அஞ்ச மாட்டேன். சிறையில் அடைத்தாலும் தொடர்ந்து கேள்வி கேட்பேன். ராணுவம், விமானத்துறை தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடனேயே முன்வைத்தேன். என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் நியாயம் கேட்பேன்.
பாஜக அமைச்சர்கள் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அதானி குழுமம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியதால் தான் பிரச்சனைகள் தொடங்கியது.
பிரதமர் மோடி பயப்படுகிறார்
பிரதமர் மோடி தொழில் அதிபர் அதானி தொடர்புகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். அதானி பற்றி அடுத்த கேள்வி கேட்பதை தடுக்கவே என்னை தகுதி நீக்கம் செய்துள்ளனர். அதானி பற்றி நான் பேசுவதை கண்டு பிரதமர் மோடி பயப்படுவதை அவரது கண்களில் பார்க்கின்றேன்.
அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட ரூ.20,000 கோடி பணம் யாருடையது என கேள்வி எழுப்பியுள்ளார். எனக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக இருக்கும். என்னை தேர்தலில் போட்டியிட அனுமதிக்காவிட்டாலும் எனது பணிகளை தொடர்ந்து செய்வேன்.
பதவி நீக்கம் எனக்கு கிடைத்த பரிசு
வயநாடு மக்களுடன் எனது குடும்பம் போல நெருங்கிய தொடர்பு உள்ளது. தேசத்தின் ஜனநாயக கட்டமைப்பை பிரதமர் சிதைக்க பார்க்கிறார். தொழிலதிபர் அதானி ஒரு ஊழல் நபர் என்பது மக்களின் மனதில் பதிந்துள்ளது. ஊழல் தொழிலதிபரை பிரதமர் மோடி ஏன் காப்பாற்றுகிறார் என மக்கள் யோசிக்க தொடங்கியுள்ளனர்.
யாருடைய பணம் அதானி குடும்பத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்கு எனக்கு பதில் தேவை. மக்களவையில் எனது குரலை நசுக்கினாலும், மக்களுக்கான எனது குரல் தொடரும். பதவி நீக்கம் எனக்கு கிடைத்த பரிசு. எனக்கு எந்த கவலையும் இல்லை என தெரிவித்துள்ளார்.