#Breaking:மீண்டும் பாஜகவுடன் உடன்பாடு;புதுச்சேரி அமைச்சரவை 14 ஆம் தேதி பதவியேற்பு..!

The Puducherry cabinet will take office on June 14

புதுச்சேரி அமைச்சரவை பங்கீடு தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக. இடையே உடன்பாடு.

அமைச்சர்கள் வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி பதவியேற்பு.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியானது,பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.இதையடுத்து கடந்த 7 ஆம் தேதி ரங்கசாமி முதல்வராக பதவியேற்று கொண்டார்.

இதனையடுத்து,சபாநாயகர் பதவி மற்றும் 3 அமைச்சர் பதவிகளை கேட்டு முதல்வர் ரங்கசாமி அவர்களை,பாஜக வலியுறுத்தி வந்தது.ஆனால் 2 அமைச்சர் பதவிக்கு மேல் தரமுடியாது என்று முதல்வர் தெரிவித்ததால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவியது.

பின்னர்,முதல்வர் ரங்கசாமியிடம்,தங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி மற்றும் 3 அமைச்சர் பதவிகள் கட்டாயம் வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனையடுத்து,புதுச்சேரி அமைச்சரவை பங்கீடு தொடர்பாக,பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ரங்கசாமி சம்மதம் தெரிவித்தார்.

அதன்பின்னர்,பதவிகளுக்கான பெயர் பட்டியல் தயாரானது,இந்த பெயர் பட்டியலை,முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கொடுப்பதற்காக அவரின் வீட்டிற்கு,பாஜக மேலிட பொறுப்பாளர் எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் மற்றும் பாஜகவினர் சென்றனர்.

அப்போது,சபாநாயகர் மற்றும் அமைச்சர் பதவிகளுக்கான பெயர்பட்டியலை குறித்து பேசாமல்,துணை முதல்வர் பதவி,இலாகா பங்கீடு தொடர்பாக எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.இதனால்,முதல்வர் ரங்கசாமி கடும் கோபம் கொண்டார்.

அதன்பின்னர்,துணை முதல்வர் பதவி பாஜகவுக்கு கிடயாது என்பதில் உறுதியாக உள்ளதாகவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,அமைச்சரவை பங்கீடு தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே இன்று நடைபெற்ற கூட்டத்தில்,துணை முதல்வர் பதவிக்கு பதிலாக,அமைச்சரவையில் உள்துறையை பாஜகவுக்கு தர முதல்வர் ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளார்.

மேலும்,அமைச்சரவை பெயர் பட்டியலை உறுதி செய்து புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் அளிக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,வருகின்ற ஜூன் 14 ஆம் தேதியன்று அமைச்சர்கள் பதவியேற்பு விழாவானது நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.