தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நண்பராக இருப்பதற்கு தயாராக இல்லை என சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து பேரவையில் உரையாற்றினார்.
பேரவையில் முதல்வர் பேச்சு
ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். ஆளுநர் திறந்த மனத்துடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல. அரசியல் சட்டம் ஆளுநருக்கு தெரியவில்லை என்று கூறமாட்டேன்.
ஆனால் அவருக்கு இருக்க வேண்டிய “அரசியல் சட்ட விசுவாசத்தை”, “அரசியல் விசுவாசம்” அப்படியே விழுங்கி விட்டது என்றே அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார்; ஆளுநரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை, அவரின் செயல்பாடுகளைத் தான் விமர்சிக்கிறோம்.
ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு என்றார் அண்ணா; அதில் நானும் உடன்படுகிறேன். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் 2வது முறையாக ஆளுநர் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது இதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்; அதை உணர்த்தும் நாளாக இது இருக்கும்.
தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நண்பராக இருப்பதற்கு தயாராக இல்லை என்று, பதவியேற்ற நாளில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி செய்யும் செயல்கள் வெளிப்படுத்தி வருகிறது. பிரதமர் தமிழ்நாடு வரும் போதோ அல்லது பிரதமரை சந்திக்க நான் டெல்லி செல்லும் போதோ, தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஆளுநர் பேசி வந்த கருத்துகளுக்கு பதிலுக்கு பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றமாக மாற்ற விரும்பவில்லை. அதேநேரத்தில் சட்டமன்றத்துக்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர நினைத்தால், அதனை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.
அரசியல் நோக்கத்துக்காக, அரசியல் லாப நஷ்டங்களுக்காக, யாரோ சிலரின் விருப்பங்களுக்காக இந்த அவையில் சட்டங்களை நாம் நிறைவேற்றுவது இல்லை. ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் அதிகரித்த போதிலும், ஆளுநர் ஒப்புதல் தர மறுக்கிறார் என தெரிவித்துள்ளார்.