அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கடந்த 1989 ஆம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட கொடூர சம்பவத்தை மறைத்து மீண்டும் எம்பி சீட்டுக்காக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலில் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் ஈடுபட்டுள்ளார்.
உண்ட கட்சிக்கு ரெண்டகம் செய்யும் வேலையை திருநாவுக்கரசு செய்திருக்கிறார். வரலாற்றுத் சம்பவத்தின் உண்மை தன்மையை மறைத்து பேசும் அவரின் செயல் வருத்தத்திற்குரியது என பேட்டியளித்திருந்தார். ஜெயக்குமாரின் கருத்துக்கு, திருநாவுக்கரசு பதில் அளித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ஜெயலலிதாவுக்கு நான் நன்றிக்கடன் படவில்லை, எனக்குதான் அவர் நன்றிக்கடன்பட்டுள்ளார். அவரை நான் காப்பாற்றியதால்தான் பொதுச் செயலாளர் ஆனார், முதலமைச்சரானார். இவர்கள் எல்லாம் அமைச்சர்கள் ஆனார்கள்; நான் அதிமுகவில் உண்ணவே இல்ல, பின்னர் எப்படி உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ய முடியும்?
ஜெயக்குமார் எப்போது அதிமுகவுக்கு வந்தார், எம்.ஜி.ஆரை பார்த்தார் என எனக்கு தெரியவில்லை. ஜெயலலிதாவுக்கு நான் நிறைய நல்லது செய்தேன்; ஆனால், அவர் எனக்கு கெடுதல்தான் செய்தார்; அவர் மறைந்துவிட்டார், எல்லாம் முடிந்துபோன விஷயம் என தெரிவித்துள்ளார்.
