முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்..!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று மதுரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உள்ளார். தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்பொழுது தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அந்நேரம் மத்திய அமைச்சராக இருந்த மு.க.அழகிரி, தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிக்காரர் கோவிலில் கிராம தலைவர்கள் மற்றும் பொது மக்களிடம் தேர்தலின் போது ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பணம் கொடுப்பதாக அதிமுகவினர் தேர்தல் அலுவலரிடம் புகாரளித்தனர். அதிமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலராக இருந்த தாசில்தார் காளிமுத்து திமுகவின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் கோவிலுக்குள் நுழைந்தார். அவரது வருகையை எதிர்த்த தி.மு.கவினர் தேர்தல் அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து திமுகவினரால் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் தாசில்தார் காளிமுத்து தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து தன் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் அளித்தார். அவரளித்த புகாரின் பேரில் மு.க.அழகிரி உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று வழக்கு தொடர்பான விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உட்பட குற்றம்சாட்டப்பட்டவர்களும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உள்ளனர்.