டெல்லியில் காவல்துறை, பொது அமைதி, நிலம் தொடர்பான விவகாரங்களை தவிர இதர துறைகள் சார்ந்த விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தை டெல்லி மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை இயற்றி, டெல்லி மாநில அரசை விட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவசர சட்டத்தை கொண்டு வந்தது.
இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கே என ஒன்றிய அரசு பிறப்பித்த அவசர சட்டத்திற்கான, முழு சட்ட மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய அவையில் அனுமதி கோரினார்.
இதனையடுத்து, மசோதாவை அறிமுகம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பதாக காங்கிரஸ் அவைத்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அதேபோல, திமுக எம்.பி டி.ஆர்.பாலுவும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஏற்கனவே, இந்த அவசர சட்டதுக்கு எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் தொடர்ந்து மௌனம் சாதித்து வந்த நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்தில் டெல்லி அவசர சட்ட மசோதாவிற்கு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
