தற்போதைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு முறைக்கு மாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் சூப்பர் ஃபுட் (Superfood) என்று அழைக்கப்படும் சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் (Flax seeds) ஆகிய இரண்டுக்கும் மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.
ஆனால், இந்த இரண்டில் எந்த விதைகளை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் எடை விரைவாகக் குறையும் என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. இவை இரண்டிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள் மற்றும் பயன்பாடுகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
சியா விதைகளின் நன்மைகள்
சியா விதைகளில் கால்சியம் மற்றும் புரதச்சத்து மிக அதிக அளவில் நிறைந்துள்ளது. இதைத் தண்ணீரில் ஊறவைக்கும் போது அது ஜெல்லி போல மாறுவதால், இது உடலை நாள் முழுவதும் நீரேற்றமாக (Hydrated) வைத்திருக்க உதவுகிறது.
மேலும், இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து உங்களின் பசியைக் கட்டுப்படுத்தி, தேவையில்லாமல் அடிக்கடி சாப்பிடுவதைத் தடுக்கிறது. சியா விதைகளை அரைக்க வேண்டிய அவசியம் இல்லை, நேரடியாகத் தண்ணீர் அல்லது ஜூஸில் கலந்து குடிக்கலாம்.
ஆளி விதைகளின் நன்மைகள் (Flax Seeds)
ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பெருமளவு உள்ளதால், இது இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், ஹார்மோன் பிரச்சனைகளைச் சரிசெய்யவும் இது பெரிதும் உதவுகிறது.
ஆனால், ஆளி விதைகளை முழுமையாகச் சாப்பிட்டால் உடல் அதனை எளிதில் செரிமானம் செய்யாது. எனவே, இந்த விதைகளை லேசாக வறுத்து, பொடியாக அரைத்து வைத்துக்கொண்டு பாலில் அல்லது உணவில் கலந்து சாப்பிடுவதுதான் சரியான முறையாகும்.
இறுதியாக எதை தேர்ந்தெடுக்கலாம்?
உங்களின் முக்கிய இலக்கு உடல் எடையை வேகமாக குறைப்பது மற்றும் எலும்புகளை வலுப்படுத்துவது என்றால், நீங்கள் சியா விதைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இது பயன்பாட்டிற்கும் மிகவும் எளிதானது.
மாறாக, உங்கள் இதயத்தைப் பாதுகாக்கவும், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் நினைத்தால் பொடியாக்கப்பட்ட ஆளி விதைகளைப் பயன்படுத்துவதே சிறந்த தேர்வாக அமையும்.
