பாக்ஸ் ஆபிஸில் பிளாஸ்ட் செய்த ‘பிளாஸ்ட்’ திரைப்படம்! முதல் நாளில் இவ்வளவா?

அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள பிளாஸ்ட் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Hero Image

சென்னை : ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் மே 28ஆம் தேதி வெளியான ‘பிளாஸ்ட்’ திரைப்படம், முதல் நாளிலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. குடும்ப உணர்வுகள், அதிரடி காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வெளியான நாளிலேயே இந்திய அளவில் சுமார் ரூ.1 கோடி நிகர வசூலைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்த வசூல் ரூ.1.15 கோடியாக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் 1,022 காட்சிகளில் திரையிடப்பட்ட இந்த திரைப்படம், முதல் நாளில் சராசரியாக 26 சதவீத இருக்கை நிரப்பலை பதிவு செய்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.95 லட்சம் வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் ரூ.10 லட்சமும், கேரளாவில் ரூ.7 லட்சமும் வசூலாகியுள்ளது.

காலை காட்சிகளில் 15.46 சதவீதமாக இருந்த பார்வையாளர்கள் வருகை, மதியம் மற்றும் மாலை காட்சிகளில் படிப்படியாக உயர்ந்தது. இரவு காட்சிகளில் 40.31 சதவீதம் வரை இருக்கைகள் நிரம்பியதாக கூறப்படுகிறது. இதனால் படம் குறித்து ரசிகர்களிடையே நேர்மறையான கருத்துக்கள் பரவி வருவதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அர்ஜுனுடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் திரைக்கதையில் இடம்பெற்றுள்ள நுணுக்கங்கள், குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ப்ரீத்தி முகுந்தனும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். வெறும் துணை கதாபாத்திரமாக இல்லாமல், கதையின் முக்கியமான பாத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

முதல் நாள் வசூல் மற்றும் வரவேற்பு படக்குழுவுக்கு நம்பிக்கையை அளித்துள்ள நிலையில், வார இறுதி நாட்களில் படம் எவ்வாறு செயல்படுகிறது என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் நேர்மறையான வரவேற்பு தொடர்ந்தால், ‘பிளாஸ்ட்’ திரைப்படம் அடுத்த சில நாட்களில் வசூலில் மேலும் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.