சென்னை :சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதாகொங்கரா இயக்கத்தில் உருவான ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. 25க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் சான்றிதழ் கிடைத்த நிலையில், படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 10) உலகமெங்கும் படம் வெளியாகிறது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், முன்பதிவு வேகமெடுத்துள்ளது. படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படும் முன்னரே 27 இடங்களில் வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தணிக்கை வாரியத்தின் பரிந்துரைகளின்படி பல்வேறு வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தி திணிப்பு தொடர்பான வசனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ‘இந்தி என் கனவை அழித்தது’ என்ற வசனம் ‘என் ஒரே கனவை இந்தித் திணிப்பு எரித்தது’ என்று மாற்றப்பட்டுள்ளது. ‘இந்தி அரக்கி’, ‘இந்தி என் வாழ்க்கையை அழித்தது’, ‘இந்தி கத்துக்கிட்டு’ போன்ற வசனங்களும் நீக்கப்பட்டுள்ளன.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘இங்கு யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்’ என்ற 22 விநாடி வசனம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. ‘தீ பரவட்டும்’ என்ற வார்த்தை ‘நீதி பரவட்டும்’ என்று மாற்றப்பட்டுள்ளது. இது அண்ணாதுரையின் புகழ்பெற்ற நூலின் தலைப்பை நினைவூட்டுவதாக உள்ளது. இந்தி திணிப்பு எதிர்ப்பு முழக்கங்கள் மற்றும் வசனங்கள் பெரும்பாலும் மியூட் செய்யப்பட்டுள்ளன அல்லது மாற்றப்பட்டுள்ளன.
மேலும் ,சில காட்சிகளும் தணிக்கை வாரியத்தால் நீக்கப்பட்டுள்ளன. கொடும்பாவி கொளுத்தும் காட்சி, தபால் நிலையம் மீது சாணம் வீசும் காட்சி போன்றவை அகற்றப்பட்டுள்ளன. மொத்தம் 52 இடங்களில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தி சார்ந்த வார்த்தைகள் பெரும்பாலானவை தணிக்கை செய்யப்பட்டுள்ளன. படக்குழு தரப்பில் தணிக்கை பரிந்துரைகளை ஏற்று மாற்றங்கள் செய்ததால் சான்றிதழ் கிடைத்துள்ளது.
படத்தின் அரசியல் மற்றும் சமூகக் கருத்துகள் காரணமாக தணிக்கை வாரியம் கடுமையான திருத்தங்களை பரிந்துரைத்துள்ளது. இருப்பினும், U/A சான்றிதழ் கிடைத்ததால் படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது. ‘ஜனநாயகன்’ படத்தின் தாமதத்தால் பொங்கல் ரிலீஸ் போட்டி பாதிக்கப்பட்ட நிலையில், ‘பராசக்தி’ தனியாக வெளியாகி வசூல் சாதனை படைக்க வாய்ப்புள்ளது.சிவகார்த்திகேயன் ரசிகர்கள் முன்பதிவு ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
