பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அதிர்வலை கிளப்பியுள்ள ‘Dhurandhar 2: The Revenge’ திரைப்படம், உலகளவில் ரூ.1000 கோடி வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடித்துள்ள இந்த ஸ்பை திரில்லர், மார்ச் 19ஆம் தேதி வெளியானது முதல் ரசிகர்களிடையே அபார வரவேற்பைப் பெற்று, ஆரம்ப நாட்களிலேயே வசூலில் புதிய உச்சங்களை தொட்டுள்ளது.
பாகிஸ்தானில் செயல்படும் இந்திய உளவாளியின் விறுவிறுப்பான கதையை மையமாகக் கொண்ட இந்த படம், முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் பலத்த எதிர்பார்ப்புடன் வெளியானது. அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்த இப்படம், வெளியான வெறும் 7 நாட்களுக்குள் ரூ.1006.50 கோடி வசூலை எட்டியிருப்பது, அதன் வெற்றியை உறுதிப்படுத்துகிறது.
இந்நிலையில், வெற்றி நடை போடும் இப்படம் சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. தமிழ்நாட்டில் இப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என மதராஸ் உயர்நீதிமன்றம் முன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இப்படத்தில் இடம்பெறும் அரசியல் சார்ந்த காட்சிகள் மற்றும் உண்மை சம்பவங்களை ஒட்டிய குறிப்புகள் வாக்காளர்களை பாதிக்கக்கூடும் என்ற காரணம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நீதிமன்றம் முறையான ரிட் மனு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
சர்ச்சைகள் எழுந்தாலும், ‘Dhurandhar 2’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வேகம் குறையவில்லை. வெளியான முதல் 4 நாட்களிலேயே ரூ.761 கோடி வசூல் செய்து, இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஓப்பனிங் சாதனைகளில் ஒன்றாக திகழ்கிறது. Pushpa 2க்கு அடுத்தபடியாக இவ்வளவு பெரிய ஓப்பனிங் வசூலை பெற்ற திரைப்படமாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், Baahubali 2, RRR, KGF 2 போன்ற பிரம்மாண்ட படங்களின் ஆரம்ப வசூல் சாதனைகளையும் இது முறியடித்துள்ளது. முதல் நாளிலேயே இந்தியாவில் ரூ.145 கோடி (நெட்) மற்றும் வெளிநாடுகளில் ரூ.52 கோடி வசூல் செய்தது. அதேபோல், ஒரே மொழியில் ஒரே நாளில் ரூ.100 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இந்த படத்தில் ரன்வீர் சிங்குடன், ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். Jio Studios மற்றும் B62 Studios தயாரித்துள்ள இந்த படம், இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் வசூல் சாதனைகளை உருவாக்கி, புதிய மைல்கல்லை நிறுவி வருகிறது.
