“உன் படத்தை முடிக்காமல் சாகமாட்டேனு டெல்லி கணேஷ் சொன்னாரு”…மணிகண்டன் உருக்கம்!!
எனக்காக பாதி சம்பளத்தில் நடித்து கொடுத்தார் என மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் குறித்து நடிகர் மணிகண்டன் அஞ்சலி செலுத்திய பிறகு உருக்கமாக பேசியுள்ளார்.
சென்னை : உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முத்த நடிகர் டெல்லி கணேஷின் (80) மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவருடைய மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று தங்களுடைய அஞ்சலியைச் செலுத்திவிட்டு அவருடன் பணியாற்றியபோது மறக்க முடியாத சம்பவங்கள் பற்றி நினைவு கூர்ந்து வேதனையுடன் பேசி வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகரும், டெல்லி கணேஷின் தீவிர ரசிகருமான மணிகண்டன் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்து அவருடன் பணியாற்றிய போது நடந்த விஷயங்களைப் பற்றி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இது குறித்துப் பேசிய அவர் ” இதே வீட்டில் 2011-ஆம் ஆண்டு டெல்லி கணேசன் சாரை பார்ப்பதற்காக நின்றுகொண்டு இருந்தேன்.
அப்போது நான் கொஞ்சம் சின்ன பையன் தான். என்னைப் பார்த்துவிட்டு என்னிடம் என்ன வேணும்? எனக் கேட்டார்.நான் என்னுடைய பெயர் மணிகண்டன் உங்களைப் பார்க்கத் தான் வந்து இருக்கிறேன் என்று சொன்னேன். பிறகு உள்ளே அழைத்து என்னிடம் பேசினார். நான் ஒரு படத்தின் கதையை அவரிடம் சொன்னார். அவர் நினைத்து இருந்தால் அந்த படத்தைச் செய்யாமல் கூடப் போயிருக்கலாம்.
நான் வளர்ந்து வரும் நடிகர் என்று பார்க்காமல் எனக்காகக் குறைவான சம்பளம் வாங்கி அந்த படத்திலும் நடித்துக் கொடுத்தார். அந்த படம் எடுத்துக்கொண்டு இருந்த சமயத்தில் அவர் இறந்துவிட்டதாகச் செய்திகள் வந்தது. உடனடியாக நான் அவருக்கு போன் செய்து விசாரணை செய்தேன். அதற்கு அவர் ” உன் படத்தை முடிக்காமல் நான் சாகமாட்டேன் என்று கூறினார்”.
அவரிடம் இருந்து பல விஷயங்களை நம்மளுடைய வாழ்க்கைக்குப் படமாக எடுத்துக் கற்றுக்கொள்ளலாம். அவருடைய மறைவு எனக்கு மிகவும் வேதனை அளித்துள்ளது. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” எனவும் மணிகண்டன் உருக்கமாகத் தெரிவித்தார். டெல்லி கணேஷை வைத்து நரை எழுதும் சுயசரிதம் என்ற குறும்படத்தை மணி இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.