சென்னை :சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜின் ‘பைசன்’ (காளமாடன்) திரைப்படம், தீபாவளி விருந்தாக அக்டோபர் 17-ஆம் தேதி வெளியானது. கபடி வீரர் மணத்தி கணேசனின் உண்மை வாழ்க்கை அடிப்படையிலான இந்தப் படம், நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பா. ரஞ்சித் தயாரித்தது. இளம் ஹீரோ துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். ரெஜிஷா விஜயன், லால், அமீர், பசுபதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் படத்தில் உள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை, படத்தின் உணர்ச்சி ஆழத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம், 5 நாட்களில் ரூ.25 கோடிக்கும் மேல் வசூல் செய்து, துருவ் விக்ரமின் முதல் பெரிய வெற்றியாக மாறியுள்ளது. எதிர்ப்புகள் இருந்தபோதும், திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பல பிரபலங்கள் படத்தைப் பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ‘பைசன்’ படத்தைப் பார்த்து இயக்குநர் மாரி செல்வராஜை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்.
வழக்கமாக எந்த திரைப்படங்கள் வெளியானாலும் நல்ல படங்களாக இருந்தால் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டுவார். அப்படி தான் பைசன் படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். படத்தை பார்த்துவிட்டு நேரில் அழைத்து ” ‘சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள் ‘என கூறியுள்ளதாக தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் இந்த தகவலை மாரிசெல்வராஜ் தெரிவித்திருக்கிறார்.
மேலும் ” பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்” எனவும் மாரிசெல்வராஜ் கூறியுள்ளார்.
unknown node