சென்னை : இசைஞானி இளையராஜா, நடிகர் விஜய்யின் புகைப்படத்துடன் அவரது பழைய பாடல் ஒன்றை தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.இளையராஜா பகிர்ந்துள்ள பாடல், எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1990ஆம் ஆண்டு வெளியான ‘இது எங்கள் நீதி’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘சின்ன தம்பி உன்னை நம்பி... காத்திருக்கு இந்த நாடு’ ஆகும்.
இந்தப் பாடலில் விஜய் சிறு குழந்தையாக நடித்திருந்தார்.இளையராஜா தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் விஜய்யின் புகைப்படத்துடன் இந்தப் பாடலைப் பகிர்ந்துள்ளார். பாடலின் தலைப்பாக “சின்ன தம்பி உன்னை நம்பி...” என்று குறிப்பிட்டு, படத்தில் விஜய் இருந்த காட்சியின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.‘இது எங்கள் நீதி’ திரைப்படம் விஜய்யின் சிறு வயது நடிப்பை வெளிப்படுத்திய முக்கியப் படங்களில் ஒன்று.
இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்போது அந்தப் பாடலை விஜய்யின் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளது, ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும், பழைய நினைவுகளையும் தூண்டியுள்ளது.இளையராஜாவின் இந்தப் பதிவு, தற்போது அரசியல் களத்தில் சுறுசுறுப்பாக உள்ள விஜய்க்கு ஆதரவாக அமைந்துள்ளதா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு ஊகங்களும் விவாதங்களும் எழுந்துள்ளன.
இசைஞானி இளையராஜா அடிக்கடி தனது பழைய பாடல்களை யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து வரும் நிலையில், இம்முறை விஜய்யின் புகைப்படத்துடன் பாடலைப் பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
