சென்னை :சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மூத்த தலைவருமான தோழர் ஆர்.நல்லக்கண்ணு (வயது 101) நேற்று (பிப்ரவரி 25) பிற்பகல் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கடந்த சில வாரங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், இறுதிக் கட்டத்தில் வெண்டிலேட்டர் உதவியுடன் போராடி வந்தார். அவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அரசியல்-சமூக வட்டாரங்களில் ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தோழர் நல்லக்கண்ணு உடல் மருத்துவமனையில் இருந்து இன்று (பிப்ரவரி 26) காலை தியாகராய நகரில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகமான பாலன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மதியம் 3 மணி வரை பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் உடல் அங்கு வைக்கப்பட்டுள்ளது.
ஏராளமானோர் கண்கலங்கி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.நடிகர் ரஜினிகாந்த் பாலன் இல்லத்திற்கு நேரில் சென்று தோழர் நல்லக்கண்ணு உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின் உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய ரஜினிகாந்த், “நான் ஓமந்தூரார் பாக்கல, அண்ணாவைப் பாக்கல, காமராஜரை பாக்கல, கட்டன் அவரை பாக்கல. அவர் எல்லாரையும் சேர்த்து நல்லகண்ணு ஒருத்தர் நான் பார்த்தேன். ஒரு நல்லவரா, நேர்மையா, எளிமையா இருந்தா மதிப்பு மரியாதையும் தாராவாக வருவதுக்கு நல்லக்கண்ணு ஒரு இடத்துல பெரிய ஆத்மா தோழர் நல்லக்கண்ணு என்னுடைய வீரவல்லவன். நன்றி” என்று கண்கலங்கிய நிலையில் கூறினார்
.ஒட்டுமொத்தமாக, தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரப் போராட்டம் முதல் மக்கள் நலப் போராட்டங்கள் வரை தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அவர், பொதுவுடைமை இயக்கத்தின் தியாகச் சின்னமாகவும், எளிமையான வாழ்க்கைக்கு உதாரணமாகவும் என்றும் நினைவில் நிற்பார். பாலன் இல்லத்தில் இன்று மதியம் வரை அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தொடர்ந்து வருகிறது. அவரது தியாகங்களையும், மக்கள் நலச் சேவைகளையும் நினைவுகூர்ந்து பலரும் கண்கலங்கி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
