சென்னை : நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட மின்சார விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பனையூரில் உள்ள ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படப்பிடிப்பில் வீடு போன்ற காட்சிக்கான கலை அலங்காரப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது மின்சார இணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் கார்த்திகேயன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.கார்த்திகேயன் படக்குழுவில் மின்சாரப் பிரிவில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
படப்பிடிப்பு தளத்தில் உள்ள செட் அலங்காரத்திற்காக மின்சார இணைப்பு பணிகளை மேற்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்த சம்பவம் ‘ஜெயிலர் 2’ படக்குழுவினரையும், திரையுலகினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு நடைமுறைகள் போதுமான அளவில் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் முதல் பாகம் பெரும் வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், இந்த உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
