பைக் RC புக் தொலைந்துவிட்டதா? போலீசிடம் அபராதம் கட்டாமல் தப்பிக்க இதை பண்ணுங்க!

பைக் ஓட்டும்போது ஒரிஜினல் RC புக் கையில் இல்லையா? இனிமேல் உங்களுக்கு கவலை வேண்டாம். ஏனென்றால், DigiLocker அல்லது mParivahan-ல் உள்ள டிஜிட்டல் RC-யை அதிகாரிகளிடம் காட்டலாம்.

Hero Image

சென்னை : நம்மில் பலருக்கு பைக்கின் அசல் ஆர்சி புக் (Original RC Book) தொலைந்து போயிருக்கலாம் அல்லது பாதுகாப்பிற்காக அதை வீட்டில் வைத்துவிட்டு வண்டி ஓட்டலாம். ஆனால், வழியில் டிராஃபிக் போலீஸ் நிறுத்தி ஆர்சி புக் கேட்டால், பலரும் பதற்றமடைந்து அபராதம் (Fine) கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இனி அந்த கவலை வேண்டாம். ஏனென்றால், உங்கள் மொபைல் போன் மூலமாகவே போலீஸ் அபராதத்தில் இருந்து தப்பிக்க ஒரு சட்டப்பூர்வமான வழி உள்ளது. அது என்ன, அதை எப்படி பயன்படுத்துவது மற்றும் தொலைந்து போன ஆர்சி புக்கிற்கு பதிலாக ஆன்லைனில் டூப்ளிகேட் ஆர்சி புக் வாங்குவது எப்படி என்று இந்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

மத்திய அரசின் சட்டம் என்ன சொல்கிறது?

இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act 2000) மற்றும் மோட்டார் வாகன விதிகளின்படி, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட DigiLocker அல்லது mParivahan ஆகிய மொபைல் செயலிகளில் (Apps) காட்டப்படும் டிஜிட்டல் ஆவணங்கள் 100% செல்லுபடியாகும்."டிஜிட்டல் ஆவணங்களை ஏற்க முடியாது, அசல் (Original) கார்டை தான் காட்ட வேண்டும்" என்று எந்த ஒரு போலீஸ்காரரும் உங்களைக் கட்டாயப்படுத்த முடியாது. அப்படி அவர்கள் மறுத்தால், அது மத்திய போக்குவரத்து அமைச்சகத்தின் சுற்றறிக்கைக்கு (Government Circular) எதிரானது ஆகும்.

செட் செய்வது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்போனில் 2 நிமிடங்களில் ஆர்சி புக் மற்றும் லைசென்ஸை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்.

டிஜிலாக்கர் (DigiLocker) ஆப் மூலம் : கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து DigiLocker செயலியை பதிவிறக்கம் செய்யவும். அதன்பிறகு உங்கள் ஆதார் எண் (Aadhaar Number) மற்றும் மொபைல் எண்ணை வைத்து அக்கவுண்ட் ஓபன் செய்யவும்.

அதன்பிறகு, உள்ளே சென்றதும் "Search" பட்டனை கிளிக் செய்து, "Registration of Vehicles" என்று தேடவும்.உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து (உதாரணம்: Tamil Nadu), உங்கள் வண்டி எண் (Vehicle Number) மற்றும் இன்ஜின் எண்/சேஸ் எண் (Chassis Number) ஆகியவற்றை உள்ளிடவும்.இப்போது உங்கள் டிஜிட்டல் ஆர்சி புக் தயாராகிவிடும். இதை நீங்கள் நெட்வொர்க் இல்லாத போதுகூட (Offline) போலீசாரிடம் காட்டலாம்.

எம்-பரிவாஹன் (mParivahan) ஆப் மூலம்: மத்திய அரசின் NextGen mParivahan ஆப்பை இன்ஸ்டால் செய்யவும்.உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு சைன்-இன் (Sign-in) செய்யவும். அதன்பிறகு, முகப்புப் பக்கத்தில் இருக்கும் "Virtual RC" என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.உங்கள் பைக் எண், சேஸ் எண்ணின் கடைசி 5 இலக்கங்கள் மற்றும் இன்ஜின் எண்ணின் கடைசி 5 இலக்கங்களை பதிவிடவும். பின், உங்கள் திரையில் ஒரு QR Code உடன் டிஜிட்டல் ஆர்சி புக் தோன்றும். போலீசார் இந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்து உங்கள் வண்டி விவரங்களைச் சரிபார்த்துக் கொள்வார்கள்.

ஆன்லைனில் 'டூப்ளிகேட் ஆர்சி' வாங்குவது எப்படி?

டிஜிட்டல் ஆர்சி புக் அவசரத்திற்கு உதவினாலும், நம்மிடம் அசல் ஆர்சி கார்டு இருப்பது எப்போதும் நல்லது. ஆன்லைனிலேயே டூப்ளிகேட் ஆர்சி புக்கிற்கு விண்ணப்பிக்கும் எளிய வழிமுறை இதோ..

தேவையான ஆவணங்கள்

  • அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட இழப்புச் சான்றிதழ் (Lost Document Report / LDR)
  • பைக்கின் சேஸ் நம்பர் பென்சில் அச்சு (Chassis print)
  • தற்போதைய லைவ் இன்சூரன்ஸ் (Insurance) மற்றும் புகைச்சான்றிதழ் (PUC)
  • முகவரி சான்று (ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை)

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை

மத்திய அரசின் Parivahan (https://parivahan.gov.in) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

  • Vehicle Related Services என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மாநிலம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை (RTO) தேர்வு செய்யவும்.
  • மெனுவில் இருக்கும் "Apply for Duplicate RC" என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • உங்கள் வண்டி எண் மற்றும் சேஸ் எண்ணை உள்ளிட்டால், உங்கள் போனுக்கு ஒரு OTP வரும்.
  • அதன் பிறகு கேட்கப்படும் விவரங்களைப் பூர்த்தி செய்து, காவல் நிலையத்தின் LDR சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.

எவ்வளவு கட்டணம்

பைக்குகளுக்கான அரசு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ டூப்ளிகேட் ஆர்சி கட்டணம் வெறும் ரூ. 150 முதல் ரூ. 300 வரை மட்டுமே (மாநிலங்களுக்கு ஏற்ப சிறிய மாற்றம் இருக்கலாம்) மேலும், ஆன்லைனிலேயே இந்தக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு, அந்த ரசீதை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின், குறிப்பிட்ட நாளில் உங்கள் அசல் ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட RTO அலுவலகத்திற்குச் சென்று சரிபார்த்து ஒப்படைத்தால், சில வாரங்களில் புதிய ஸ்மார்ட் கார்டு ஆர்சி புக் உங்கள் வீட்டிற்கே ஸ்பீடு போஸ்ட் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இனி பைக் ஓட்டும்போது ஆர்சி புக் இல்லை என்று கவலைப்படாமல், உடனே உங்கள் போனில் டிஜிலாக்கர் ஆப்பை ஏற்றி ஆவணங்களைச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். சட்டப்படியான விழிப்புணர்வு இருந்தால் தேவையற்ற அபராதங்களைத் தவிர்க்கலாம்.