டெல்லி : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 15 வயது 99 நாட்களில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி அவர் வரலாற்று சாதனை படைத்திருந்தாலும், 2026 டி20 உலகக்கோப்பையை வென்று தந்த நாயகன் சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு அவருக்கு வாய்ப்பளித்தது ரசிகர்களிடையேயும், முன்னாள் வீரர்களிடையேயும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் தனது யூடியூப் சேனலில், இந்திய அணி மீண்டும் பழைய தவறையே செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், "அபிஷேக் ஷர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகிய இருவரையும் இந்திய அணியின் நீண்டகால தொடக்க ஆட்டக்காரர்களாகப் பார்க்க முடியாது. ஏனெனில், இருவருமே இடதுகை பேட்டர்கள் (Left-handers). சர்வதேச கிரிக்கெட்டில் இரு இடதுகை பேட்டர்கள் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்குவது அணியின் சமநிலையைப் பாதிக்கும்.
இந்திய அணியின் முதல் 7 பேட்டர்களில் 6 பேர் இடதுகை ஆட்டக்காரர்களாக இருப்பது மிகப்பெரிய பின்னடைவு," என்று எச்சரித்துள்ளார். கடந்த டி20 உலகக்கோப்பையின்போது இசான் கிஷன் - அபிஷேக் ஷர்மா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கியபோது, அவர்கள் ஆஃப்-ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறியதை கைப் சுட்டிக்காட்டினார். "தற்போது இங்கிலாந்து அணியின் வில் ஜாக்ஸ் போன்ற பகுதிநேர ஆஃப்-ஸ்பின்னர்கள் கூட வைபவ் சூர்யவன்ஷியை எளிதாக ஸ்டம்பிங் செய்ய வைக்கின்றனர்.
இந்திய அணி நிச்சயம் ஒரு வலதுகை பேட்டரைத் தொடக்க ஆட்டக்காரராகக் கொண்டிருக்க வேண்டும். சஞ்சு சாம்சன் போன்ற வீரர் அணியில் இருப்பது மிகவும் அவசியம்," என்று கைப் வலியுறுத்தினார்.
வைபவ் சூர்யவன்ஷியோ அல்லது அபிஷேக் ஷர்மாவோ யாராவது ஒருவரை 3-வது வரிசைக்கு மாற்றிவிட்டு, சஞ்சு சாம்சனைத் தொடக்க ஆட்டக்காரராகக் கொண்டு வர வேண்டும். சஞ்சு சாம்சன் அழுத்தமான தருணங்களில் மீண்டு வந்து சிறப்பாக விளையாடக்கூடிய திறமை படைத்தவர். அணியின் மேலாண்மை, இடது-வலது பேட்டர் கூட்டணியை (Left-Right combination) கருத்தில் கொண்டு சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்," என்று தனது ஆலோசனையை வழங்கியுள்ளார்.
உலகக்கோப்பையை வென்ற நாயகனையே பெஞ்சில் அமர வைப்பது இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். வரும் போட்டிகளிலாவது சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.