சென்னை : மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், ஊடகங்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் தன்னை மட்டும் தொடர்ந்து கேள்வி கேட்பதாகவும், அதே கேள்விகளை மற்ற அரசியல் தலைவர்களிடம் ஏன் கேட்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் " கேள்வி கேக்குறவங்க ஒருத்தர் பாத்து என்ன கேக்குறாரு நீங்க வந்து RSS பெற்ற பிள்ளைன்னு விஜய் விஜய் விஜய் அவர்கள் வந்து விமர்சிச்சுருக்கங்களே. அப்புறம் எப்படி அவரோட போய் நீங்கக் கூட்டணி சேர்ந்தீங்கன்னு கேக்குறாங்க. அதே கேள்வியை திருப்பிப் கேக்கலாம்ல. உங்கள திருமாவளவன் வந்து RSS பெற்ற பிள்ளைன்னு சொன்னாரே.

அப்புறம் எப்படி நீங்க அவருகிட்ட போய் ஆதரவு கேக்குறீங்க அப்படின்னு யாரும் ஒருத்தர் கூட விஜய் கிட்ட கேக்கலை. கேக்கணுமா இல்லையா? அதுதானே நியாயம். அதுதானே ஜனநாயகம். திரு. விஜய் அவர்களே! உங்களை அவ்வளவு கடுமையா திருமாவளவன் விமர்சித்தாரு. RSS பெற்ற பிள்ளை சொன்னாரே, அவருகிட்ட ஏன் நீங்க வந்து வெளிப்படையா ஆதரவு கேக்குறீங்க அதும் கேட்டு இருக்கணும். கேக்க மாட்டாங்க. திமுகவோடு நட்பு தொடர்வதுன்னு சொல்லிட்டோம்.

அந்த மே பத்து, பதினொன்னு, பன்னெண்டு அந்தக் காலகட்டத்துல நாம ஆதரவு தெரிவிச்ச நேரத்துல அப்புறம் அமைச்சரவை சேர்ந்த நேரத்துல மே இருபத்தி ஒன்றுக்குப் பிறகு பேசும்போது சொன்னேன். அதை எப்படி சொல்லலாம்? இப்போ நான் கேக்குறேன்.

திமுகவை தீயசக்தி ன்னு சொன்னவரு எப்படி முன்னாள் முதலமைச்சர் வீட்டுக்கு போகலாம்? யாராவது கேட்டீங்களா? தீயசக்தி ன்னு சொன்னாரா இல்லையா? அப்போ அண்ணன் ஸ்டாலின் அவருகிட்ட நீங்கக் கேக்கணும். என்னங்க உங்களை தீயசக்தி ன்னு சொன்னாரு. அவர ஏன் நீங்கப் போய் வரவேற்கறீங்க? ன்னு கேள்வி கேக்கணும். அல்லது நீங்கத் தீயசக்தி ன்னு சொன்னீங்க. அவரை எதிர்த்துத் தான் உங்களுக்கு மக்கள் ஓட்டு போட்டாங்க. அப்புறம் எந்த அடிப்படையில நீங்க அவர் வீட்டுக்குப் போனீங்க? அவரைப் போய் அவருடைய வாழ்த்துக்களைப் பெற்றீங்க. அப்படின்னு நம்முடைய முதலமைச்சர் விஜய் அவர்களைப் பாத்து கேக்கணும்.

எல்லா பிரச்சனைக்கும் என்னிடம் கருத்து கேட்கிறீர்கள். நான் ஒன்றைச் சொன்னால், அதை அப்படியே எடுத்துக்கொள்ளாமல், 'விஜய்க்கு எதிராகத் திருமாவளவன்', 'ஸ்டாலினுக்கு எதிராகத் திருமாவளவன்' என்று கார்டு போட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறீர்கள். குழப்புவது நீங்களா அல்லது நானா?" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அரசியலில் நட்பு இருக்கக்கூடாதா? உறவு இருக்கக்கூடாதா? எந்தவொரு விஷயத்திலும் ஒரு நடைமுறை (Procedure) உள்ளது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு என்பது முக்கியம். அந்தந்தக் காலகட்டத்தில் இருந்த சூழலுக்கு ஏற்பவே எனது கருத்துக்கள் இருந்தன. அதை ஏன் தவறாகச் சித்தரிக்கிறீர்கள்?" என்றும் அவர் விளக்கமளித்தார்.

திமுகவுடனான தனது நட்பைத் தொடர்வது கொள்கை ரீதியானது என்பதை வலியுறுத்திய திருமாவளவன், அரசியல் விமர்சகர்களும், பத்திரிகையாளர்களும் ஒருதலைப்பட்சமாகச் செயல்படாமல், நியாயமான முறையில் கேள்விகளை முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.