சென்னை : ஐபிஎல் வரலாற்றில் மிக வெற்றிகரமான மற்றும் நீண்டகாலமாகத் தொடர்ந்த பயிற்சியாளர் - அணி இடையிலான கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டீஃபன் பிளெமிங் (Stephen Fleming) அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். 18 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் முதுகெலும்பாக இருந்த இவரது விலகல், கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிளெமிங் மற்றும் சிஎஸ்கே இடையிலான இந்த 18 ஆண்டுகாலப் பயணம் ஐபிஎல் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும். இவரது பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை ஐபிஎல் (IPL) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 (CLT20) கோப்பையை வென்றுள்ளது.

இவரது வழிகாட்டுதலில் அணி அடைந்த வெற்றிகள் மற்றும் பிளெமிங்கின் அமைதியான அணுகுமுறை சிஎஸ்கே அணியை மற்ற அணிகளிடமிருந்து தனித்துக்காட்டியது.

இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிளெமிங் மற்றும் நிர்வாகம் இடையே நடைபெற்ற வெளிப்படையான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, பரஸ்பர உடன்படிக்கையின் அடிப்படையில் இந்தப் பிரிவினை நடந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான மற்றும் நீடித்த கூட்டணியாக இருந்த இந்தத் தருணத்தை, மிகுந்த மரியாதையுடனும் நன்றியுடனும் முடிவுக்குக் கொண்டு வருகிறோம்," என்று தெரிவித்துள்ளது.

தோனி மற்றும் பிளெமிங் இணை சிஎஸ்கேவின் அடையாளமாகவே பார்க்கப்பட்டது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பிளெமிங் விலகியிருப்பது, சிஎஸ்கே அணிக்கு அடுத்தகட்டத் திட்டமிடலில் பெரிய சவாலாக அமையும். 18 ஆண்டுகால இந்தத் தலைசிறந்த கூட்டணி இன்றுடன் முடிவுக்கு வருவது, சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.