சென்னை : தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த சில நாட்களுக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 3 -ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல் உட்புற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஏனைய தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஜூலை 4-ஆம் தேதி கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உட்புற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை தொடரக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக 37°C வரையிலும், குறைந்தபட்சமாக 28°C முதல் 29°C வரையிலும் வெப்பநிலை இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.