சென்னை : நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் D55 திரைப்படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையுடன் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. சமீபத்தில் வெளியான அவரது ‘கர’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், அடுத்த படத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை புழல் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், ஆரம்பத்தில் இது ஒரு கிராமத்து கதையா என்ற கேள்வி எழுந்த நிலையில், பின்னர் இது முழுக்க முழுக்க கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகும் ஆக்ஷன் திரைப்படம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் என்பதால், இந்தப் படத்துக்கு ஆரம்பத்திலிருந்தே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வடஇந்திய தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை மிகப்பெரிய அளவில் தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களின் படி, இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் ரூ.160 கோடி என கூறப்படுகிறது. அதில் நடிகர் தனுஷுக்கு மட்டும் ரூ.20 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் தயாரிப்பு செலவு மட்டும் ரூ.70 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

அதோடு, விளம்பர செலவு, வட்டி மற்றும் பிற தயாரிப்பு செலவுகள் சேர்த்து படம் மிகப்பெரிய அளவில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. சமீப காலங்களில் தனுஷின் சில படங்கள் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெறாதபோதும், இந்தப் படத்தை தயாரிக்கும் நிறுவனம் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழ் ரசிகர்களை மட்டும் நம்பாமல், வடஇந்திய சந்தையையும் குறிவைத்து இந்தப் படத்தை மிகப்பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கமும், தனுஷின் நடிப்பும் சேர்ந்து இந்தப் படம் பான் இந்தியா அளவில் பெரிய வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பு நிறுவனம் அதிக முதலீடு செய்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், “சமீபத்தில் பெரிய வெற்றி இல்லாத நிலையில் கூட தனுஷ் தனது சம்பளத்தை ரூ.10 கோடி வரை உயர்த்தியுள்ளார்” என்ற தகவலும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.