தடையின்றி குடிநீர் விநியோகம்.. 150 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

Apr 27, 2024 - 08:29
 0  4
தடையின்றி குடிநீர் விநியோகம்.. 150 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!
#image_title

MK Stalin: குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், இதனை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெப்ப அலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். இதன்பின் பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் பல்வேறு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனையை நடத்தியுள்ளார். அப்போது குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சர் கூறியதாவது, கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வறட்சி பாதித்த மாவட்டங்களில் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை உள்ள மாவட்டங்கள் நிதியை பகிர்ந்துகொண்டு குடிநீர் விநியோகம் பணியை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள்  அமலில் இருப்பதால் குடிநீர் விநியோகம் பணியில் சுணக்கம் ஏற்பட கூடாது.

கிராமப்புறங்களில் வறண்டு போன ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்ற நிலையங்கள் தடையின்றி செயல்பட சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும். கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் என்பதால் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

கடந்தாண்டு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது மேற்கு மாவட்டங்களில் போதிய மழை இல்லை. இதனால் மேற்கு மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்சனை உள்ள இடங்களுக்கு நேரில் சென்று தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow