பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில் பருவகால நோய் தொற்றாக பறவை காய்ச்சல் பரவி வருகிறது. பறவை காய்ச்சல் தொடர்பாக தற்போது பரவி வரும் A(H5N1) வைரஸானது இதுவரை மனிதர்களுக்கு பரவவில்லை என்றாலும், குழந்தைகள் மற்றும் வயதானோர் பாதுகாப்பாக இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

இந்தியாவில் பறவை காய்ச்சல் பரவுவது தொடர்பாக ஏப்ரல் 28ஆம் தேதி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஓர் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியது. அதில், மகாராஷ்டிரா மாநிலத்தின் கால்நடை பராமரிப்பு ஆணையர், ICMR தலைமை அதிகாரி, ICMR-NIV புனே அதிகாரிகள், மாநில சுகாதாரத்துறை  கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள், மாவட்ட கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள், நாசிக் மற்றும் மாலேகானைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகள்  ஆகியோர் பங்கேற்றனர்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட (IDSP) நெட்வொர்க் மூலம் பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பரவும் பருவகால காய்ச்சல் நிலவரம் குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. குறிப்பாக இதில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இணை நோயுற்றவர்கள் ஆகியோர் விரைவில் பாதிக்கப்படக்கூடிய நபர்களாக உள்ளனர் என பட்டியலிடப்பட்டு பருவகால நோய்கள் குறித்து கண்காணித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள ICMR ஆய்வகங்களின் மூலம், பருவகால நோய்கள் குறித்த கண்காணிப்பை மேற்கொள்ள சுகததரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பருவகால நோய்கள் மற்றும் கடுமையான சுவாச தொற்றுகள் போன்ற பரவும் நோய்கள் குறித்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பருவகால நோய்கள் குறித்து உலக சுகாதார அமைச்சகம் கூறுகையில், அமெரிக்காவில் இந்த A(H5N1) நோய் தொற்றானது கால்நடைகள் மற்றும் பாலில் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த பொது அபாயம் எதுவுமில்லை என்றும், இருந்தாலும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த மார்ச் முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரையில் அமெரிக்காவில் 33 மாடுகளிடம் இந்த A(H5N1) என்ற வைரஸ் தொற்று பரவியுள்ளது என்றும், இந்த பருவகால காய்ச்சல் (பறவை காய்ச்சல்) மற்ற WHO உறுப்பு நாடுகளில் பரவியுள்ளதா என்பது குறித்து மற்ற நாடுகள் தெரிவிக்க வேண்டும் என்று WHO கூறியுள்ளது.