ஜிம்பாப்வே : சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்ட விவகாரம், கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவை இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனது யூடியூப் சேனலான 'ஆஷ் கி பாத்' (Ash Ki Baat) நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின், சஞ்சு சாம்சன் நீக்கம் குறித்து காட்டத்துடன் பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் "நான் இந்த முடிவை முற்றிலுமாக எதிர்க்கிறேன். இது முற்றிலும் அநீதியானது. ஒரு சில மோசமான ஆட்டங்களுக்காக சஞ்சுவை அணியிலிருந்து நீக்குவது எந்த வகையில் நியாயம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் "தொடர்ந்து இப்படி வீரர்களை மாற்றுவது, அணியில் இருக்கும் மற்ற வீரர்களிடையே பாதுகாப்பற்ற உணர்வை (Insecurity) ஏற்படுத்தும். இது இந்திய டி20 அணியின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய ஆபத்து," என அவர் எச்சரித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், "வீரர்கள் தங்களுக்குப் பதில் மற்றவர் வந்துவிடுவாரோ என்ற பயத்தில், அணி வெற்றி பெறுவதை விட, தங்கள் இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள். டி20 கிரிக்கெட்டில் இது போன்ற மனநிலை மிகவும் ஆபத்தானது. சஞ்சுவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் கூட, அவரும் இனி அணியில் நீடிக்க வேண்டும் என்பதற்காகவே விளையாடுவார். இது அவரது இயல்பான ஆட்டத்தைப் பாதிக்கும்," என்று விளக்கியுள்ளார்.