டெல்லி : இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாட வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து முன்னாள் இந்திய வீரர் அம்பதி ராயுடு தெரிவித்த கருத்துக்கள் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளன. குறிப்பாக, “வைபவ் சூர்யவன்ஷியின் நிழலில் இருந்து வெளியே வரவேண்டும் என்றால் ஜெயஸ்வால் ராஜஸ்தான் அணியை விட்டு வெளியேற வேண்டும்” என்ற அவரது கருத்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
2020 முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜெய்ஸ்வால், இதுவரை 82 போட்டிகளில் 2592 ரன்கள் குவித்துள்ளார். அணியின் முக்கியமான தொடக்க வீரராக உருவெடுத்த அவர், கடந்த சில சீசன்களில் அதிரடி ஆட்டத்தால் கவனம் பெற்றிருந்தார். ஆனால் இந்த சீசனில் அவரது ஆட்டத்தில் தொடர்ச்சியான நிலைத்தன்மை இல்லாதது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
மறுபுறம், 15 வயது இளம் வீரரான வைபவ் சூரியவன்ஷி இந்த சீசனில் அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் அணியின் தூணாக மாறியிருக்கிறார். தற்போது ஆரஞ்சு தொப்பி பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அவர், 680 ரன்கள் குவித்து அசத்தி வருகிறார். அதிரடி ஆட்டம், வேகமான ரன் குவிப்பு மற்றும் அச்சமில்லா பேட்டிங் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ராயுடு, "ஜெய்ஸ்வால் ஒவ்வொரு முறையும் சூர்யவன்ஷியின் நிழலில் இருக்க முடியாது. அவர் தனியாக ஒரு நட்சத்திரம். வேறு அணிக்கு சென்றால் போட்டிகளை தனியாக வெற்றி பெற வைக்கும் வீரராக மாறுவார். அவருக்கு தனி மேடை மற்றும் சுதந்திரமான இடம் தேவை" என்று கூறினார்.
மேலும், “சூர்யவன்ஷி தொடர்ந்து மற்ற வீரர்களை மிஞ்சிப் பிரகாசிப்பார். அவருடன் விளையாடுபவர் அனுபவமிக்க மூத்த வீரராக இருக்க வேண்டும். போட்டியிடாமல், அவரின் திறமையை ரசிக்கக்கூடிய ஒருவர் தான் அவருக்கு சரியான கூட்டாளி” என்றும் தெரிவித்தார்.
இந்த சீசனில் ஜெய்ஸ்வால் 15 போட்டிகளில் 426 ரன்கள் எடுத்திருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக ஹைதராபாத் அணிக்கு எதிரான வெளியேற்ற சுற்றுப் போட்டியில் அவர் 29 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அதே எண்ணிக்கையிலான பந்துகளில் சூர்யவன்ஷி 97 ரன்கள் குவித்தது ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளானது.
ஜெய்ஸ்வால் எதிர்காலத்தில் ஏலத்திற்கு வந்தால் பல அணிகள் அவரை வாங்க முயற்சிக்கும் என்றும், குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியே அவருக்கு சரியான தேர்வாக இருக்கும் என்றும் ராயுடு கருத்து தெரிவித்துள்ளார். “ரோஹித் சர்மா தனது கிரிக்கெட் பயணத்தின் இறுதி கட்டத்தை நோக்கி செல்கிறார். அந்த இடத்தை நிரப்ப ஜெய்ஸ்வால் வீரர் மும்பைக்கு பொருத்தமானவர்” என்றும் அவர் கூறியுள்ளார்.