சென்னை : அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவருமான தோனியின் எதிர்காலம் குறித்து மீண்டும் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் முக்கிய விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் “தோனி தனது எதிர்காலம் குறித்து எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதையும், எந்த பொறுப்பில் தொடர வேண்டும் என்பதையும் அவர் தானே முடிவு செய்வார். அந்த முடிவை சிஎஸ்கே எப்போதும் மதிக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2026 தொடரில் சிஎஸ்கே மோசமான செயல்பாட்டால் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது. குறிப்பாக குஜராத் அணியிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு, தோனியின் எதிர்காலம் மீண்டும் பேசுபொருளானது.

44 வயதான தோனி இந்த சீசனில் காயம் காரணமாக ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. கால்வலி மற்றும் விரல் காயம் காரணமாக முழு உடல்தகுதியை அடைய முடியாமல் போனதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அவர் அணியுடன் இருந்து வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கியதும், பயிற்சிகளில் ஈடுபட்டதும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

தோனி எதிர்காலத்தில் வீரராக இல்லாவிட்டாலும், பயிற்சியாளர், வழிகாட்டி அல்லது ஆலோசகர் போன்ற எந்த வடிவிலும் அணியுடன் தொடர வேண்டும் என்பதே சிஎஸ்கே நிர்வாகத்தின் விருப்பம் என காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். “தோனி எப்போதும் சிஎஸ்கேயின் நிரந்தர அங்கமாக இருக்க வேண்டும் என்பதே எங்களது எண்ணம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தோனி ஓய்வு பெற்றாலும், சிஎஸ்கே அமைப்பில் முக்கிய பொறுப்பில் தொடர வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

மேலும் தற்போதைய கேப்டன் ருத்ராஜ் அமைதியான தலைவராக உருவாகுவதற்கு தோனி மற்றும் தலைமை பயிற்சியாளர் ஸ்டிபன் பிளமிங் ஆகியோரின் பங்கு மிகப்பெரியது என்றும் காசி விஸ்வநாதன் பாராட்டினார். “கடந்த சில ஆண்டுகளாக தோனியை நெருக்கமாக கவனித்த ருதுராஜ், அவரது தலைமைத் திறன்களையும் அமைதியான அணுகுமுறையையும் கற்றுக்கொண்டுள்ளார்” என்றார்.