சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது மனைவி கயல்விழி தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ள நிலையில், அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி சூழ்ந்துள்ளது. புதிதாக பிறந்த குழந்தையை பார்க்க உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் தாய் மாமன் சீர் எடுத்து சென்றது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கவனம் பெற்று பேசு பொருளாக வெடித்தது.
கயல்விழியின் குடும்பத்தினருடன் நீண்டகால நெருக்கம் உள்ளதாக கூறிய அனிதா ராதாகிருஷ்ணன், “கயல்விழியின் தந்தை காளிமுத்து அண்ணனுடன் எனக்கு சிறுவயதில் இருந்தே பழக்கம் உள்ளது. அந்த குடும்பத்துடன் நீண்ட நாள் உறவு இருக்கிறது. கயல்விழி சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே எனக்கு தெரியும். அதனால் அவரை நான் என் தங்கை போலவே நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “இப்போது அவர்களுக்கு ‘காளி’ என்ற பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியை ஒரு குடும்ப உறுப்பினராக பகிர்ந்து கொள்ளவே நான் தாய் மாமன் சீர் எடுத்துச் சென்றேன். இது அரசியல் நிகழ்வு அல்ல; ஒரு அண்ணனின் பாசத்தால் செய்யப்பட்ட விஷயம்” என்று கூறினார்.
இந்த நிகழ்வில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தனர். சீமான் குடும்பத்தினருக்கும் பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக சமூக வலைத்தளங்களிலும் இந்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வேகமாக பரவி வருகின்றன.