திருச்சி : கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சி வந்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு கட்சியினரும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை ஏராளமானோர் திரண்டு முதலமைச்சரை வரவேற்றனர்.

இந்த நிலையில், திருச்சி மக்களவை உறுப்பினரும் மதிமுக முதன்மைச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ, முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருச்சி மக்களவை உறுப்பினர் என்ற முறையில் முதலமைச்சரை வரவேற்றேன். தொகுதி மக்களின் கோரிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக விரைவில் முதலமைச்சர் விஜய்யை சந்திக்க உள்ளேன். அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வேன்" என்றார்.

மேலும், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கூட்டணி விவகாரம் குறித்தும் துரை வைகோ கருத்து தெரிவித்தார். "துரதிருஷ்டவசமாக நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். அந்த சின்னத்தில் போட்டியிட்ட காரணத்தால் தேர்தல் நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. கூட்டணி தொடர்பான விவகாரங்களில் தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் எடுக்க முடியாது" என்று கூறினார்.

திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா, தொடராதா என்பது குறித்து ஜூன் 27ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.

முதலமைச்சர் விஜய்யை துரை வைகோ நேரில் சந்தித்து வரவேற்றதும், பின்னர் அவர் தெரிவித்த கருத்துகளும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக கூட்டணி குறித்து அவர் வெளிப்படையாக பேசியிருப்பது அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று பின்னர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்த முதலமைச்சர் விஜய், அந்த தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.