சென்னை : முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டப்பேரவை நிகழ்வுகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிலையில், அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

இந்த முக்கிய கூட்டத்தொடருக்கு முன்பாகவே சட்டப்பேரவை வளாகத்தில் அரசியல் பரபரப்பு நிலவியது. தவெக அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். மேலும், பல்வேறு கோஷங்கள் மற்றும் விமர்சன வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"வாயைத் திறங்க CM", "கதறல் கேட்குதா CM?", "சிறு பெண்கள் இங்கே... சிங்கப் பெண்கள் எங்கே?", "ரீல்ஸ் இங்கே... ரியல் எங்கே?", "மாஸ்டர் வாயில் பிளாஸ்டர்", "திரையில் நாயகன்... தரையில் வில்லன்", "திரையில் HERO இல்லை... தரையில் ZERO", "தற்குறி ஆட்சி, தமிழ்நாடே சாட்சி", "தூய சக்தி அல்ல, துயர சக்தி" உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகள் கவனத்தை ஈர்த்தன.

சட்டப்பேரவை வளாகத்தில் திமுக உறுப்பினர்கள் நடத்திய இந்த போராட்டம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, தவெக அரசின் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, திமுக உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்ததுடன், அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பும் வகையிலான வாசகங்களையும் முன்வைத்தனர். இதனால் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.