சேலம் : மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் விஜய் அண்மையில் கரூரில் ஆற்றிய உரைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவையும், திமுகவையும் "கூட்டுக் களவாடிகள்" என்று முதலமைச்சர் விஜய் விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈபிஎஸ் அதிரடியான கருத்துகளை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் "ஒரு முதலமைச்சர் என்பவர் பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். 'கூட்டுக் களவாடிகள்' என்ற வார்த்தை அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல, இதை முதலமைச்சர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்," என்று எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
அதிமுகவை களவாளி என்று விமர்சித்த விஜய்க்குப் பதிலடி கொடுத்த அவர், "அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை, குதிரை பேரம் மூலம் ராஜினாமா செய்ய வைத்து, தனது தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைத்தவர் தான் உண்மையான களவாளி. வெற்றி பெற்ற வேட்பாளர்களைக் குறுக்கு வழியில் தன்பக்கம் இழுத்தவர் எப்படி எங்களை விமர்சிக்கலாம்?" என்று கேள்வி எழுப்பினார்.
சட்டப்பூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ-க்களை, பதவியை ராஜினாமா செய்ய வைத்து தனது கட்சியில் சேர்த்தது ஜனநாயகப் படுகொலை என்றும், இதுவே மிகப்பெரிய அரசியல் ஊழல் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
திமுக - அதிமுக - தவெக ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையிலான அரசியல் மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. ஆர்.எஸ். பாரதியின் விமர்சனங்களுக்குப் பிறகு, தற்போது எடப்பாடி பழனிசாமியும் முதலமைச்சர் விஜய்யை நேரடியாகக் களவாளி என்று விமர்சித்திருப்பது, தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்ட மோதலுக்கு வித்திட்டுள்ளது.