கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயற்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தனது அடையாளம் மற்றும் அரசியல் கொள்கைகள் குறித்து எழுந்த விமர்சனங்களுக்குத் தனது பாணியில் ஆவேசமான பதிலடிகளை வழங்கியுள்ளார்.

தன்னை 'தெலுங்கன்' என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலளித்த அவர், "அம்பேத்கரைத் தமிழர் இல்லை என்று சொல்லிப் புறந்தள்ள முடியுமா? புரட்சியாளர் அம்பேத்கர், காரல் மார்க்ஸ் போன்ற உலகத் தலைவர்களை நாம் அவர்களின் மொழி அல்லது இனத்தைக் கடந்து, கொள்கைக்காகவே ஏற்றுக்கொண்டுள்ளோம்.

மொழியின் அடிப்படையில் ஒருவனை வெறுப்பது அறியாமை. மும்மொழி எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு, வடவர் ஆதிக்கம் எதிர்ப்பு போன்றவைதான் நான் உள்வாங்கியுள்ள 'தமிழ் தேசியம்'. இந்தியாவில் மொழிவழி தேசியத்தை முன்வைத்துச் செயல்படும் ஒரே தலித் இயக்கம் விசிக தான்" என்று குறிப்பிட்டார்.

ஊடகங்கள் மற்றும் அரசியல் அரங்கில் விசிக தற்போது பெற்றுள்ள முக்கியத்துவம் குறித்துப் பேசிய திருமாவளவன், "தொடக்கத்தில் எங்களைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வர சில நொடிகள் கிடைத்தால் கூடப் பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், இன்று சிறுத்தைகளைப் பற்றி விவாதிக்காத ஊடகங்களே இல்லை என்ற நிலையை எட்டியிருக்கிறோம். இது ஏதோ தற்செயலாக வந்தது அல்ல; பல ஆண்டு கால இடைவிடாத போராட்டத்தின் விளைவு," என்று தனது பயணத்தை நினைவு கூர்ந்தார்.

அரசியல் எதிரிகள் மற்றும் சாதி வெறியர்கள் தன் மீது சுமத்தும் அவதூறுகள் குறித்துப் பேசிய அவர், "அரசியல் பகை கொண்ட சில அற்பர்கள், நான் தமிழனே இல்லை என்றும், என் பெயரைத் திம்மவாளன் என்றும் திரித்துப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், 'உன்னை அவ்வளவு இலகுவாக அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ஆனால் உன் தலைமையை ஏற்றுக்கொள்ளும் காலம் வரும்' என்று என்னை ஆரத் தழுவி வழியனுப்பி வைத்தவர் அண்ணன் பிரபாகரன். சாதி, மத வெறியால் என்னையோ, விசிகவையோ யாரும் அசைக்க முடியாது," எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அம்பேத்கர் மற்றும் பெரியார் கொள்கைகளின் வழியில், "சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை" என்பதைத் தனது கட்சியின் அடிப்படைக் கொள்கையாக முன்னிறுத்துவதாகவும், தமிழ்த் தேசியம் பேசும் பிற அமைப்புகள் கூட இவ்வளவு வெளிப்படையாகச் சாதி ஒழிப்பைப் பேசுகிறதா என்று கேள்வி எழுப்பினார்.