வியட்நாமின் : பூ குவாக் (Phu Quoc) தீவு அருகே ஏற்பட்ட படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களில், தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரின் உடல்களைச் சொந்த ஊருக்குக் கொண்டுவரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன்படி, முதற்கட்டமாகச் சென்னை விமான நிலையத்திற்கு இரண்டு உடல்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேரின் உடல்கள் கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
வியட்நாமிலிருந்து மும்பை வழியாகக் கொண்டு வரப்பட்ட 5 உடல்களில், 3 உடல்கள் இன்று கோவை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தன. இதற்காக, உடல்களை விரைவாகச் சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்கள் முன்னரே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
முன்னதாக, மொத்தம் 6 உடல்களைக் கோவை விமான நிலையத்திற்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது வந்த 3 உடல்களைத் தவிர, எஞ்சிய 3 உடல்கள் இன்று பிற்பகல் 1 மணி அளவில் கோவை விமான நிலையத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வியட்நாம் விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்களில், இதுவரை மொத்தம் 5 பேரின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளன. மீதமுள்ள 5 பேரின் உடல்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசும், இந்தியத் தூதரகமும் இணைந்து தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.