சென்னை : அ.தி.மு.க-வில் தொடர்ந்து நிலவி வரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியானது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமீப நாட்களாக அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள உள்கட்சி குழப்பங்கள், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா, கட்சி மாறுதல் உள்ளிட்ட விவகாரங்கள் பரபரப்பை கிளப்பியுள்ள சூழலில், விஜயபாஸ்கரின் நிலைப்பாடு குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், நேரடியாக எந்த முடிவையும் அறிவிக்காமல், “நாளை என்னுடைய நிலைப்பாட்டை தெரிவிப்பேன்” என்று கூறியுள்ளார். மேலும், விராலிமலை தொகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் உள்ளிட்ட பலரும் தன்னை சந்தித்து கருத்துகளை தெரிவித்ததாக அவர் கூறினார்.

“எனக்காக தேர்தலில் கடுமையாக உழைத்த நிர்வாகிகள், நண்பர்கள், மக்கள் அனைவரின் கருத்துகளையும் நான் கேட்டேன். அவர்கள் பல்வேறு ஆதங்கங்களையும், வேதனைகளையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தினார்கள். அந்த கருத்துகளை முழுமையாக உள்வாங்கியிருக்கிறேன். அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு தான் அடுத்த முடிவை எடுப்பேன்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “எனக்கு முக்கியம் என்னுடைய தொகுதி மக்கள் தான். அவர்கள் தான் என்னுடைய முதல் முன்னுரிமை. கடும் மழை, சவாலான சூழல் இருந்தபோதும் 62 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்தார்கள். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்ற வேண்டும். மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்” என்றார்.

அதேநேரத்தில், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா வழியில் பயணம் தொடர்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த 25 ஆண்டுகளாக அ.தி.மு.க-வில் இருந்து பொதுவாழ்க்கையில் செயல்பட்டு வருவதாகவும், மாணவர் காலத்திலிருந்தே கட்சியுடன் பயணித்து வருவதாகவும் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாக வெளியாகும் தகவல்கள் குறித்து கேட்கப்பட்டபோது, “அவை யூகங்கள்” என சுருக்கமாக பதிலளித்தார். மேலும், “நாளை சபாநாயகரை சந்திப்பீர்களா?” என்ற கேள்விக்கு, “நாளை நிறைய திருமணங்கள் இருக்கிறது” என்று நகைச்சுவையாக பதிலளித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.