திருவள்ளூர் : மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் இறால் மற்றும் மீன் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, அமோனியா வாயு கசிவால் மொத்தம் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 67 பேர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தொழிலாளர் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். வாயு கசிவு ஏற்பட்ட காரணம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களும் அதிர்ச்சி மற்றும் இரங்கலை தெரிவித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, "இந்த விபத்து மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

மேலும், ஆரம்பத்தில் உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அனைத்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் உயர்தர சிகிச்சை வழங்கி காப்பாற்ற வேண்டும் என்றும், காயமடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உயிரிழந்த குடும்பங்களில் தகுதியானவர்களுக்கு அரசு வேலை வழங்கும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இனி இதுபோன்ற பேரழிவுகள் நிகழாத வகையில் அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.