சென்னை : பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக அ.தி.மு.க நிர்வாகிகள் பெருமளவில் த.வெ.க-வில் இணைய விருப்பம் தெரிவித்து வருவதாக அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
“90 சதவீத அ.தி.மு.க நிர்வாகிகள் த.வெ.க-வுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் ஒரே நம்பிக்கை த.வெ.க மட்டும்தான் என்று அவர்கள் கூறி வருகின்றனர்” என ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். மேலும், “செங்கோட்டையன் த.வெ.க-வில் இணைந்தபோது, இந்தக் கட்சி சிறிய கட்சி என விமர்சித்தவர்கள் இன்று அமைதியாக உள்ளனர்” என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுக ஆட்சிக் காலத்தில் இருந்த ‘முதலமைச்சர் குடும்ப நிதி’ என்ற அரசியல் கலாச்சாரத்தை த.வெ.க ஒழித்துள்ளது. தற்போது கட்சி நிதி என்ற பெயரில் நடைபெறும் முறைகளுக்கும் முடிவு கட்டப்பட்டுள்ளது” என குற்றம்சாட்டினார். மேலும், “மாற்றுக் கட்சியினர் எடுக்கும் அரசியல் முடிவுகளை திமுக எப்படி கேள்வி கேட்க முடியும்? அந்த பண்ணையார் மனநிலைதான் அவர்களின் தோல்விக்கு காரணம்” என்றும் விமர்சித்தார்.
அதே நேரத்தில், திமுக மற்றும் அதிமுக இடையே தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலேயே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஆதவ் அர்ஜூனா குற்றஞ்சாட்டினார். “உதயநிதி முதலமைச்சராகவும், எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சராகவும் வர ஒரு கூட்டுச் சூழ்ச்சி நடந்தது. அதற்காகவே புதுச்சேரியில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து பெற முயற்சி நடந்தது” என்ற அவரது குற்றச்சாட்டு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேலும், “அ.தி.மு.க-வில் இருந்து வருபவர்களை அன்புடன் வரவேற்க தயாராக இருக்கும் கட்சி த.வெ.க தான். யாருக்கும் எந்த சலுகையோ, ஆஃபரோ கொடுத்து அழைக்கவில்லை. உண்மையான எம்.ஜி.ஆர் வழியில் நடப்பது தமிழக வெற்றிக் கழகம்தான்” என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.