சென்னை : அதிமுகவில் தொடர்ந்து நீடித்து வந்த உள்கட்சி குழப்பங்களுக்கு மத்தியில், அக்கட்சியின் 3 எம்.எல்.ஏக்கள் திடீரென ராஜினாமா செய்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த மூவரும், அ.தி.மு.க.வில் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கூட விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர்கள் எடுத்துள்ள இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ராஜினாமா செய்த மூன்று எம்.எல்.ஏக்களும் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கினர். அதன் பின்னர் அவர்கள் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர்.

இந்த சம்பவம் அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஏற்கனவே கட்சிக்குள் நிலவி வரும் கருத்து வேறுபாடுகள், எஸ்.பி.வேலுமணி - எடப்பாடி பழனிசாமி தரப்புகளுக்கிடையேயான மோதல் போன்ற சூழலில், 3 எம்.எல்.ஏக்கள் ஒரே நேரத்தில் வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், “எம்.எல்.ஏ ஒருவர் ராஜினாமா செய்தால் அடுத்ததாக என்ன நடக்கும்?” என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சட்டப்படி, முதலில் அந்த ராஜினாமாவை சட்டப்பேரவை தலைவர் ஏற்க வேண்டும். அவர் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதும், அந்த தொகுதி “காலி தொகுதி” என அறிவிக்கப்படும். அதன் பின்னர் தேர்தல் ஆணையம் அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும்.

புதிய எம்.எல்.ஏ தேர்ந்தெடுக்கப்படும் வரை அந்த தொகுதிகளுக்கு நேரடி மக்கள் பிரதிநிதி இருக்க மாட்டார். தற்போது இந்த மூன்று தொகுதிகளிலும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.