மேற்கு வங்கம் : அரசியலில் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சி தனது உருவாக்கத்திற்குப் பிறகு மிகக் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சியின் முக்கியத் தலைவர்கள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, பாஜக-வைத் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஃபேஸ்புக் நேரலையில் பேசிய மம்தா பானர்ஜி, "தேர்தல் முடிவுகள் வந்த நாளில், பாஜக ஆதரவாளர்கள் சிலர் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறக்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால், பாஜக-வின் வீழ்ச்சியைக் காணும் வரை நான் உயிரோடுதான் இருப்பேன்," என்று ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், தனது வயதைக் குறித்து விமர்சிப்பவர்களையும் அவர் கடுமையாகக் கண்டித்தார்.

கட்சியில் தலைவர்கள் விலகுவது குறித்துப் பேசிய அவர், "2006-ல் நான் கட்சியைப் பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் கட்டமைத்தேன். அதேபோல் 2026-லும் என்னால் கட்சியை மீண்டும் வலிமையாகக் கட்டியெழுப்ப முடியும். சில தலைவர்கள் மிரட்டலுக்குப் பயந்து வெளியேறுகிறார்கள், அவர்கள் செல்ல விரும்பினால் தாராளமாகச் செல்லலாம்," என்று நம்பிக்கையுடன் கூறினார். தற்போது கட்சியில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தொண்டர்களுக்காகவும் மக்களுக்காகவும் தனது போராட்டம் தொடரும் என்றார்.

கட்சியின் அதிருப்தி கோஷ்டி மற்றும் முக்கியத் தலைவர்கள், அபிஷேக் பானர்ஜியின் செயல்பாடுகளைக் குற்றம் சாட்டி வெளியேறுவது குறித்துப் பேசிய மம்தா, தனது மருமகனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். "அபிஷேக் பானர்ஜியை ஒரு காரணமாகச் சொல்லி, துரோகிகள் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள். அவர் போர்க்களத்தை விட்டு ஓடிவிடவில்லை; ஒரு புலியைப் போலப் போராடுகிறார்," என்று அவரைப் புகழ்ந்து தள்ளினார்.

முன்னதாக, மூத்த எம்.எல்.ஏ மதன் மித்ரா, "அபிஷேக் பானர்ஜி ஆறு மாதங்களுக்கு ஒதுங்கியிருக்க வேண்டும்" என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி கோஷ்டியில் இணைந்ததாகத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில், மம்தா பானர்ஜியின் இந்தப் பேச்சு கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.