சென்னை : ஜன நாயகன் திரைப்படம் தனது கடைசிப் படம் என்று தளபதி விஜய் அறிவித்த அந்த நொடியில் இருந்தே, ரசிகர்கள் மிகுந்த ஆவலுடனும், பெரும் எதிர்பார்ப்புடனும் காத்துக்கொண்டிருக்கின்றனர். எப்போது இப்படம் திரையரங்குகளில் வெளியாகும், எப்போது திரையில் தங்களது நடிகரை ஒருமுறை கண்டு ரசிக்கலாம் என்று ரசிகர்கள் கண்கள் இமைக்காமல் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இருப்பினும், இந்தத் திரைப்படத்தைச் சுற்றி கடந்த சில மாதங்களாக நடந்தேறிய தடைகளும் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தன. ஒரு திரைப்படத்தைச் சுற்றி இவ்வளவு குழப்பங்களும், சர்ச்சைகளும் நிகழ்ந்திருக்குமா என்பது சந்தேகமே என்று சொல்லும் அளவிற்கு இந்தத் திரைப்படம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தது.
இந்தத் திரைப்படத்தில் சில காட்சிகள் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருப்பதாகக் கூறி, தணிக்கை வாரியம் (Censor Board) படத்திற்குச் சான்றிதழ் வழங்க மறுத்தது. இதனால், படம் தயாராகியும் சுமார் ஏழு மாதங்களாகத் தணிக்கை அலுவலகத்தின் கதவுகளுக்குள்ளேயே முடங்கிப் போயிருந்தது. ஒரு பெரும் நட்சத்திரத்தின் படம் வெளியாவதில் இவ்வளவு பெரிய தேக்கம் ஏற்பட்டது திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.