டெல்லியில் இன்று முதல் டீசல் பேருந்துகள் இயங்க தடை.!

Nov 1, 2023 - 05:33
 0  0
டெல்லியில் இன்று முதல் டீசல் பேருந்துகள் இயங்க தடை.!

தேசிய தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் மோசம் அடைந்து வருவதால் பிற மாநிலங்களில் இருந்து இயங்கும் அனைத்து டீசல் பேருந்துகளும் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் 30ம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் டீசல் பேருந்துகளுக்கு முழுமையான தடையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குளிர்கால செயல் திட்டத்தின் கீழ் டெல்லி அரசு செயல்பட்டு வருவதாக கூறிய கோபால் ராய், கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி 397 ஆக இருந்த காற்றின் தரக் குறியீடு (AQI) நேற்று 325 ஆக இருந்தது. இது காற்றின் தரம் முன்னேற்றம் அடைந்துள்ளதைக் காட்டுகிறது. அதை மேலும் மேம்படுத்த முயற்சித்து வருவதாகக் கூறினார். ஆனால், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) படி, ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) டெல்லியில் 373 ஆக உள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், சிவப்பு சிக்னலின் போது வாகனத்தின் இன்ஜினை அணைக்குமாறு டெல்லி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் டீசல் பேருந்துகள் இயங்குவதால் மாசு அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர், ஐஎஸ்பிடியில் ஆய்வு செய்ததில், உ.பி மற்றும் ஹரியானாவில் இருந்து இங்கு வந்துள்ள அனைத்து பேருந்துகளும் பிஎஸ் III மற்றும் பிஎஸ் IV பேருந்துகள் என்பது கண்டறியப்பட்டதாக கூறினார்.

இதனால் ஹரியானா, உத்திரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் என்சிஆர் பகுதிகளில் இயக்கப்படும் டீசல் பேருந்துகளுக்கு முழுமையான தடையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். எனவே டீசலில் இயங்கும் பேருந்துகளால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்கவும், காற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முதல் டெல்லி மற்றும் என்சிஆரில் உள்ள ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நகரங்களுக்கு இடையே மின்சார, சிஎன்ஜி மற்றும் பிஎஸ்-6 பேருந்துகள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும். மேலும், அனைத்து நுழைவுச் சாவடிகளிலும் போக்குவரத்துத் துறை மூலம் சோதனை நடத்தப்படும். விதிமுறைகளை பின்பற்றாத பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow