சென்னை : தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி கொடுத்துள்ளார். ஆளுநர் உரை சுயபுகழ் பாடும் உரை அல்ல என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அரசின் செயல்திட்டங்களை விளக்கும் முழுமையான கொள்கை ஆவணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "முதலாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் மிகவும் அமைதியான முறையில் தொடங்கியது. அந்த உரையில் தமிழக அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளில் எந்த திசையில் பயணிக்கப் போகிறது, வளர்ச்சிக்கான திட்டங்கள் என்ன, இருமொழிக் கொள்கை தொடர்பான நிலைப்பாடு என்ன, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் அரசு எவ்வாறு செயல்படப் போகிறது என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், தேர்தலின்போது மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்காக சிறப்பு திட்ட அமலாக்கத் துறையின் கீழ் விரிவான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அவை ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த பாஜக - தவெக நெருக்கம் குறித்த குற்றச்சாட்டுக்கும் அவர் பதிலளித்தார். "பாஜகவுக்கும் தவெகவுக்கும் இடையே நெருக்கம் இருப்பதாக கூறுவது தவறு. உண்மையில், பாஜக மற்றும் திமுக இடையேதான் நெருக்கமான உறவு உள்ளது என்ற சந்தேகம் எழுகிறது. தமிழக அரசால் அனுப்பப்பட்ட சில முக்கிய கோப்புகள், குறிப்பாக சில முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கான கோப்புகள், ஆளுநரின் ஒப்புதலுக்காக நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளன. அதற்கு ஏன் இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் தொடர்பாக எழுந்த விவாதத்திற்கும் அமைச்சர் விளக்கம் அளித்தார். "தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது முதலமைச்சர் விஜயின் விருப்பம். அதனால்தான் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தேசிய கீதம் ஒலிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டிருப்பதே முக்கியம்" என்றார்.
மேலும், அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களையும் அவர் மறுத்தார். "சிங்கப்பெண் உள்ளிட்ட பல திட்டங்கள் தற்போதைய அரசின் புதிய முயற்சிகளாகும். தமிழகத்தின் வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. எந்த சூழ்நிலையிலும் மாநில நலனில் முதலமைச்சர் விஜய் சமரசம் செய்து கொள்ளமாட்டார்" என்று நிர்மல் குமார் உறுதிபட தெரிவித்தார்.
ஆளுநர் உரையை மையமாகக் கொண்டு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் அடுத்த நாட்களிலும் அரசியல் விவாதங்கள் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.