டெல்லி : ஐபிஎல் 2026 தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புதிய வரலாறு படைத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு பிறகு தொடர்ச்சியாக இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மூன்றாவது அணியாக ஆர்சிபி மாறியுள்ளது.

இந்த வெற்றிக்கு விராட் கோலி, ரஜத் படிதார், புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட வீரர்கள் முக்கிய பங்காற்றியிருந்தாலும், அணியின் வெற்றிக்கு பின்னால் இருந்த சில முக்கிய நபர்களை முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "ஆர்சிபி அணி இதே வேகத்தில் சென்றால் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வெற்றிக்காக நான் ஐந்து பேருக்கு முக்கியமாக பாராட்டு தெரிவிக்க விரும்புகிறேன். ஆண்டி பிளவர், மோ போபட், தினேஷ் கார்த்திக் மற்றும் அவரது பயிற்சி குழு, ரஜத் படிதார், விராட் கோலி ஆகியோர் தான் அந்த ஐந்து பேர்" என்று கூறினார்.

குறிப்பாக விராட் கோலியின் அணுகுமுறையை அஸ்வின் வெகுவாக பாராட்டினார். பல ஆண்டுகளாக ஆர்சிபியின் முகமாக இருந்த கோலி, அணியில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தபோதும், கேப்டன் பொறுப்பை ரஜத் படிதாருக்கு முழுமையாக வழங்கி, மூத்த சகோதரர் மற்றும் வழிகாட்டியாக செயல்பட்டது தான் இந்த வெற்றியின் முக்கிய காரணங்களில் ஒன்று என்று அவர் கூறினார்.

"ஒரு அணியின் மையப்புள்ளியாக இருந்த விராட் கோலி, தனது இடத்தை பின்னுக்கு தள்ளி வைத்து ரஜத் படிதாரை முன்னிலைப்படுத்தினார். அணியை வழிநடத்த அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். இவ்வளவு பெரிய ஆளுமை கொண்ட வீரர் இப்படி செயல்படுவது சாதாரண விஷயம் அல்ல. 17 அல்லது 18 ஆண்டுகளாக கோப்பைக்காக காத்திருந்த ஆர்சிபி, இறுதியில் வாய்ப்பு கிடைத்தபோது அதை முழுமையாக பயன்படுத்தி சாம்பியனானது. அடுத்த ஆண்டே மீண்டும் கோப்பையை தக்க வைத்தது. இது அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு பெரிய பாடம்" என்று அஸ்வின் தெரிவித்தார்.

மேலும், ஆர்சிபி தலைமை பயிற்சியாளர் ஆண்டி பிளவர் மற்றும் கிரிக்கெட் இயக்குநர் மோ போபட் ஆகியோரின் பங்களிப்பையும் அஸ்வின் புகழ்ந்தார். எந்த அணிக்கு சென்றாலும் சமநிலையான அணியை உருவாக்கும் திறமை ஆண்டி பிளவருக்கு இருப்பதாக கூறிய அவர், சுழற்பந்து வீச்சாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் தற்காப்பு பந்து வீச்சாளர்களை சரியான விகிதத்தில் தேர்வு செய்வதே அவரது வெற்றியின் ரகசியம் என்றார்.

அதேபோல், உள்ளூர் சூழ்நிலைகள் பற்றிய அனுபவத்தை தினேஷ் கார்த்திக் அணிக்கு வழங்கியதாகவும், மோ போபட் தலைமையிலான நிர்வாக குழு சரியான வீரர்களை தேர்வு செய்து வலுவான அணியை உருவாக்கியதாகவும் அஸ்வின் பாராட்டினார்.