வாஷிங்டன் : அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முன்மொழிவுக்கு இரு தரப்பினரும் ஆரம்ப கட்ட ஒப்புதலை வழங்கியிருப்பதாக கூறப்பட்டாலும், இறுதி முடிவு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒப்புதலைப் பொறுத்தே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் மோதல்களால் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டித்து தூதரக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்த வரைவு குறித்து அமெரிக்கா தனது முக்கிய கூட்டாளி நாடுகளுடனும், குறிப்பாக இஸ்ரேலுடனும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கும் இரு நாடுகளும் புரிந்துணர்வை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போர் நிறுத்தத்தை நீட்டிப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நிலையான அமைதிக்கான பாதையை உருவாக்கும் நோக்கத்திலும் இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் படி, உலகின் முக்கிய கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வணிகக் கப்பல்களுக்கு எந்த தடையும் இல்லாமல் பாதுகாப்பான போக்குவரத்து உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஈரான் தனது கடற்படை கண்ணிவெடிகளை 30 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்ற நிபந்தனையும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு பதிலாக, ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அணு ஆயுதங்களை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என்ற உறுதியையும் ஈரான் வழங்க வேண்டும் என வரைவு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய அம்சமாக ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை எவ்வாறு கையாளுவது என்பது விவாதிக்கப்பட உள்ளது. இருப்பினும், இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்போ அல்லது ஈரான் அரசோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், இந்த 60 நாள் நீட்டிப்பு ஒப்பந்தம் அமலுக்கு வந்தால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது.