வாஷிங்டன் : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (J.D. Vance), "இஸ்ரேலுக்கு உலகளவில் அமெரிக்கா மட்டுமே எஞ்சியிருக்கும் ஒரே சக்திவாய்ந்த கூட்டாளி" என்று தெரிவித்த கருத்துக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலடி கொடுத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5, 2026) 'ஃபாக்ஸ் நியூஸ்' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இஸ்ரேலுக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் ஆதரவு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க துணை அதிபரின் கருத்தை மறுத்த நெதன்யாகு, "எங்களுக்குப் பல நண்பர்கள் உள்ளனர். அதில் 'இந்தியா' என்று அழைக்கப்படும் ஒரு சிறிய நாடு உள்ளது. உங்களுக்குத் தெரியுமா? அந்த நாட்டில் 140 கோடி மக்கள் உள்ளனர், அங்கு எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது," என்று நெதன்யாகு பெருமிதத்துடன் கூறினார். குறிப்பாக, சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் இந்திய மக்களிடமிருந்து தனக்கு அமோக ஆதரவு கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலுக்குப் பிற கூட்டாளிகள் யாரும் இல்லை என்ற வான்ஸின் கூற்றை நிராகரித்த நெதன்யாகு, பல உலகத் தலைவர்கள் தன்னிடம் ரகசியமாகத் தொடர்புகொண்டு பேசுவதாகவும் கூறினார். "பல நாட்டுத் தலைவர்கள் என்னை அழைத்து, 'எங்களுக்குப் பொதுமக்களின் கருத்து குறித்த அழுத்தம் இருக்கலாம், ஆனால் உங்களை நாங்கள் மதிக்கிறோம்.

உங்களுடன் சில ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள முடியுமா? உங்கள் ராணுவத்தின் உத்திகள், ஏஐ (AI) மற்றும் சைபர் நிபுணத்துவத்தை எங்களுக்குக் கற்றுத் தர முடியுமா?' என்று கேட்கிறார்கள்," என்று அவர் தெரிவித்தார்.

இஸ்ரேல் இன்று சைபர் துறையில் உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த நாடாகத் திகழ்வதையும், அதன் தொழில்நுட்ப வளர்ச்சி மற்ற நாடுகளை ஈர்த்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், "நான் இஸ்ரேல் அமைச்சரவையில் இருந்தால், எனக்கு உலகளவில் எஞ்சியிருக்கும் ஒரே சக்திவாய்ந்த கூட்டாளியான அமெரிக்காவைத் தாக்க மாட்டேன்" என்று விமர்சித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதை நிரூபிக்க, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் நட்புறவை நெதன்யாகு மேற்கோள் காட்டியுள்ளார்.