பிரான்ஸ் : நாட்டில் கடந்த ஜூன் மாதம் நிலவிய வரலாறு காணாத கடும் வெப்ப அலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,025 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பொது சுகாதாரத்துறை (Public Health France) உறுதிப்படுத்தியுள்ளது. ஜூன் 22-ஆம் தேதியுடன் தொடங்கிய அந்த வாரத்தில், வழக்கமான இறப்பு விகிதத்தை விட சுமார் 30 சதவீதம் கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தின் உச்சகட்ட வெப்பத்தின் போது, முந்தைய மாதங்களை விட 2,025 கூடுதல் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.
பிரான்ஸின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டிப் பதிவானது. இந்த அதீத வெப்பம் காரணமாகப் பாரிஸ் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்தது.
எச்சரிக்கை: காலநிலை மாற்றத்தால் இதுபோன்ற வெப்ப அலைகள் அடிக்கடி நிகழக்கூடும் என்றும், வரும் நாட்களில் தரவுகளை மேலும் ஆய்வு செய்யும்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அரசு எச்சரித்துள்ளது.
முன்னதாக, வெப்பத்தைத் தணிக்க நீர்நிலைகளில் தஞ்சம் அடைந்தவர்களில் சுமார் 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவங்களும், வெப்பம் காரணமாகப் பல்வேறு உள்கட்டமைப்பு பாதிப்புகளும் பிரான்ஸில் பெரும் சோகத்தை ஏற்படுத்தின.