சென்னை : அதிமுக மற்றும் அமமுக இணையப் போவதாகச் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தொடர்ச்சியாக வதந்திகள் பரவி வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியான மற்றும் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார்.
வழக்கமான வதந்தி: "இப்போது ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் நீங்கள் சொல்வது போன்ற செய்திகள் வருவது உண்மைதான். ஆனால், எங்கள் கட்சியில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள் அல்லது தலைமைக் கழக நிர்வாகிகள் என யாரும் என்னிடம் வந்து அதிமுகவுடன் கட்சியை இணைக்க வேண்டும் என்று பேசவில்லை.
கூட்டணி தர்மம்: "நாங்கள் இப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தான் நீடிக்கிறோம். இந்தத் தேர்தலில் நாங்கள் 11 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம். அந்த ஒரு தொகுதியின் வெற்றிக்குக் கூட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் உழைப்புதான் காரணம். ஒரு கூட்டணியில் இருந்து ஜெயித்துவிட்டு, சுயநலத்திற்காக நேர் எதிரான இன்னொரு கூட்டணிக்கு மாறுவது என் குணாதிசயம் கிடையாது. நான் மற்ற அரசியல்வாதிகளைப் போன்றவன் அல்ல." என தெரிவித்தார்.
அதிமுகவிற்கு ஆதரவு: "தேர்தலுக்குப் பிறகும் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக மற்றும் அதிமுகவிற்கு உறுதுணையாகத் தான் நிற்கிறோம். குறிப்பாக, இந்தச் சோதனையான மற்றும் கடினமான காலகட்டத்திலும் நாங்கள் அதிமுகவுக்கு ஆதரவாகவே இருக்கிறோம். ஒரே கட்சியாக இணைய வேண்டிய சூழல் வந்துள்ளதாக மற்றவர்கள் நினைக்கலாம்; ஆனால், இப்போதைக்கு 'Wait பண்ணுவோம், பொறுத்திருந்து பார்ப்போம்' என்றுதான் நான் கூறுவேன்." எனவும் டிடிவி தெரிவித்துள்ளார்.
அதே சமயம், தமிழகத்தில் அமைந்துள்ள புதிய தவெக (TVK) அல்லது மாற்று அரசு மற்றும் அதன் வாக்குறுதிகள் குறித்து டிடிவி தினகரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், " புதிய ஆட்சியில் முதலமைச்சர் மற்றும் செங்கோட்டையன் அவர்களைத் தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் புதியவர்கள். அவர்களுக்கு நிர்வாகப் பயிற்சிக்காகவும், ஆட்சி முறையைப் புரிந்து கொள்வதற்காகவும் 6 மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்கிற நியாயம் எங்களுக்கும் தெரியும்.
விவசாயிகள் யாரும் உங்களிடம் வந்து கடனைத் தள்ளுபடி செய்யக் கேட்கவில்லை. நீங்களாகவே தேர்தல் வாக்குறுதியில் கூறிவிட்டு, இப்போது ரிசர்வ் வங்கி (RBI) விதிகள் மற்றும் நிதிநிலையைக் காரணம் காட்டி ஏமாற்றப் பார்க்கிறீர்கள். இதனால் தான் விவசாயிகள் போராடுகிறார்கள். ஒரு குடிமகனாக நான் கேட்கிறேன், விவசாயிகளை இப்படி ஏமாற்றக் கூடாது, முழுமையாகக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் தருவோம் என்று கூறிவிட்டு, இப்போது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தான் 200 யூனிட், அதுவும் மொத்தம் 500 யூனிட்டிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றெல்லாம் புதிய நிபந்தனைகளைப் போடுவது அப்பட்டமான தவறு. தமிழ்நாட்டில் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பது உங்களுக்குத் தெரியாமல் இல்லை; தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போதே இது உங்களுக்குத் தெரியும். இப்போது நிதிநிலையைக் காரணம் காட்டி மக்களை ஏமாற்றுவது தவறு" எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.