சென்னை : தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை வழங்கினார். நேற்று நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கு விளக்கமளிக்கும் வகையில் முதலமைச்சர் தனது உரையைத் தொடங்கினார்.

பதிலுரையின் தொடக்கத்தில், தமிழக வெற்றிக் கழகத்தையும் அதன் சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்து சட்டப்பேரவைக்கு அனுப்பிய தமிழக மக்களுக்கு நன்றியைத் தெரிவித்த முதலமைச்சர் விஜய், மக்கள் நலனே அரசின் முதன்மை நோக்கம் என வலியுறுத்தினார்.

உரையின் போது டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் அதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து முதலமைச்சர் குறிப்பிட்டபோது, ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியினரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குறிப்பாக திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்ததால் அவையில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து பேரவைத் தலைவர் தலையிட்டு, முதலமைச்சரின் உரை முடிந்த பின்னர் எதிர்க்கட்சியினருக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். இருப்பினும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அமைச்சர்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், “மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட முறைகேடாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். தவறு செய்தவர்களை யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்துவோம்” என்று உறுதியாக தெரிவித்தார். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதன்பின்னரும் தனது பதிலுரையைத் தொடர்ந்த முதலமைச்சர், அரசியல் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு சிறிய நிகழ்வை எடுத்துக்கூறினார். அவருடைய பாணியில் நான் ஒரு குட்டி கதை சொல்கிறேன் " வெயிலில் நின்றபடி எதையோ தேடிக்கொண்டிருந்த வயதான ஒருவரிடம் ஒரு சிறுவன் என்ன தேடுகிறீர்கள் என்று கேட்க, “உன் அப்பாவைத் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று அவர் பதிலளித்ததாக கூறி தொடர்பில்லாத விஷயங்களை இணைத்து பேசுவது அரசியல் விவாதத்திற்கு உதவாது என்ற கருத்தை நகைச்சுவையாக பதிவு செய்தார்.

முதலமைச்சரின் இந்த பேச்சு அவையில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் புன்னகையுடன் அந்த நிகழ்வை கவனித்தனர். முக்கியமாக விஜய் கூறிய குட்டி கதையை கேட்டு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்சன் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்து தனது உரையை நிறைவு செய்தார்.